கெய்ரோ

சுற்றுலா பயணிகளுக்காக எகிப்தில் மீண்டும் விமான போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்று எகிப்திலும் அதிகமாக உள்ளது.   இங்கு மொத்தம் 9.9 கோடி மக்கள் வசித்து வருகின்றனர்.   இங்கு 68 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இதில் 2963 பேர் உயிர் இழந்து இதுவரை 18460 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எகிப்தில் தலைநகர் கெய்ரோ மற்றும் முக்கிய நகரான கிசா ஆகிய இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.  இதைக் கட்டுக்குள் கொண்டு வர எகிப்து அரசு கடும் முயற்சி எடுத்து வருகிறது.   கருவுற்றிருக்கும் பெண்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும் என்பதால் தற்போது பெண்கள் கருவுறுவதை தவிர்க்க வேண்டும் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

கொரோனா பரவல் இருந்தாலும் பொருளாதாரத்தை உடனடியாக மீட்டு எடுக்கும் நிலையில் எகிப்து உள்ளது.   அதையொட்டி எகிப்து அரசு விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்கி உள்ளது.   அத்துடன் அருங்காட்சியகம், பிரமிடுகள் ஆகியவையும் திறக்கப்பட்டுள்ளன.   இன்று ஒரே நாளில் கெய்ரோ விமான நிலையத்திலிருந்து 14 சர்வதேச விமானங்கள் புறப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் நாட்டில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.