சிதம்பரம்:
புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில்,  மற்ற  214 தீட்சிதர்களும்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா பக்தர்கள் இன்றி நடத்த  தமிழகஅரசு அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி, கடந்த ஜூன் மாதம்  19-ம் தேதி கொடியேறி திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 150 தீட்சிதர்களுக்கு வருவாய்த்துறை யினர் அனுமதி அளித்திருந்தனர்.
அதைத்தொடர்ந்து, அவர்கள் அனைவருக்கும்  கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.  அவர்களில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அதையடுத்து, அவருடன் தொடர்பில் உள்ள தீட்சிதர்களை தனிமைப்படுத்த சுகாதாரத்துறையினர் உத்தரவிட்டனர்.
ஆனால், கோவில் நிகழ்ச்சி காரணமாக தனிமைப்படுத்த முடியாத சூழல் எழுந்தது. இதையடுத்து, சுழற்றி முறையில் தீட்சிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு ஆனி திருமஞ்சனம் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் பங்குகொண்ட சுமார் 300 தீட்சிதர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகிறது.  கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளான 2 தீட்சிதர்களுடன் தொடர்பில் இருந்த  214 தீட்சிதர்களை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்ட ஸ்டிக்கரை ஒட்டி உள்ளனர்.  இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.