சென்னை: ஐசிஎம்ஆர் பரிந்துரை செய்த விரைவு-ஆன்டிஜன் டெஸ்டிங் கிட்டுகள் தமிழகத்தில் பயன்படுத்தப்படாது என்றும், ஆர்டிபிசிஆர் பரிசோதனை முறையேப் பயன்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் நிர்வாக இயக்குநர் உமாநாத்.
அவர் கூறியுள்ளதாவது, “ஆன்டிஜன் கிட்டுகள் எல்லா நேரங்களிலும் பயனுடையதாக இருப்பதில்லை. விதிமுறையின்படி, ஆன்டிஜன் பரிசோதனையில் நெகடிவ் முடிவு வந்தால், அவர் மீண்டும் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.
“வெறும் 10% அளவிற்கு மட்டுமே பரிசோதனைப் பொருத்தம் வருவதால், மொத்தம் 10000 ஆன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டால், அதனோடு சேர்த்து 9000 ஆர்டிபிசிஆர் பரிசோதனையும் செய்ய வேண்டியுள்ளது. எனவே, இந்தச் சிக்கலுக்குப் பதிலாக நேரடியாக 10000 ஆர்டிபிசிஆர் பரிசோதனையை செய்துவிடலாம்” என்றுள்ளார் உமாநாத்.
ஆர்டிபிசிஆர் பரிசோதனையில், முடிவுகள் தெரிய 24 மணிநேரம் ஆகும். இதன் முடிவுகள் 99.3% மற்றும் 100% அளவிற்கு துல்லியமாக வருவதால், இதுவே நடைமுறைக்கு ஏற்றது.
விரைவு ஆன்டிஜன் பரிசோதனையில் நெகடிவ் என்று வரும்போது, மீண்டும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு அதில் உறுதிசெய்ய வேண்டும். அதில் கிடைக்கும் முடிவுதான் இறுதியானது. அதன் நுட்ப அளவு 50.6% முதல் 84% வரை என்பதால், அதைப் பயன்படுத்துவதில்லை என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.