மதுரை:
காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட சாத்தான்குளம் ஜெயராஜ், காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் உயிரிழந்த சம்பவ்ம நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த கொடூர சம்பவம் குறித்து மதுரை உயர்நீதி மன்றத்தின் உத்தரவின்பேரில் மாவட்ட நீதிபதி பாரதிதாசன் சம்பவம் நடைபெற்ற இடங்களுக்கு சென்று நேரடி விசாரணை நடத்தினார். அது தொடர்பான விரிவான அறிக்கையை உயர்நீதிமன்றம் மதுரையில் தாக்கல் செய்தார்.
அதில், சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொடூரமாக தாக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளார். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் விடிய விடிய லத்தியால் தாக்கியதாக நேரடி சாட்சி வாக்குமூலம் அளித்ததில் தெரியவந்தது என்பதையும் உறுதிப்படுத்தி உளளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 19-ஆம் தேதி போலீஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் நேரடி சாட்சியான பெண் காவலரிடம் வாக்குமூலமாக பதிவு செய்தார். காவல்நிலையத்தில் தந்தை மகன் தாக்கப்பட்ட இடத்தை ஆய்வு நடத்தியவர் மேலும பலரிடம் விசாரணை நடத்தினார். காவல்நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றினார்.
இதுதொடர்பாக அவர் உயர்நீதிமன்ற பதிவாளருக்கு 4 பக்க அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,
விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், ஜெயராஜையும் பென்னிக்ஸையும் லத்தியால் விடிய விடிய அடித்துள்ளனர். இது நேரடி சாட்சியின் வாக்குமூலம் மூலம் தெரியவந்தது. இந்த தாக்குதலில் உபயோகப்படுத்தப்பட்ட லத்தி, மற்றும் காவல்நிலைய மேஜையில் ரத்தக்கறை உள்ளது. ஆனால், அதை காவலர்கள் அழித்ததாகவும் காவல்நிலைய பெண் காவலர்கள் கூறியதாக தெரிவித்து உள்ளார்.
மேலும், முக்கிய சாட்சிகள் அழிக்கப்பட்டுள்ளன, சாட்சியம் அளித்த பெண் காவலரை மற்ற காவலர்கள் மிரட்டி உள்ளதும் தெரிய வந்ததுள்ளது.
அவர்கள்மீது தாக்குதல் நடத்திய லத்தியை கேட்ட போது, காவலர் மகாராஜன் முன்னுக்கு பின் முரணான வகையிலும் ஒருமையிலும் பேசினார். மீண்டும் மீண்டும் லத்தியை கேட்ட போது அங்கிருந்த மற்றொரு காவலர், காவல்நிலையத்தில் இருந்து எகிறி குதித்து தப்பி ஓடினார்.
பின்னர் வற்புறுத்தி கேட்ட போது லத்தியை கொடுத்தார்கள். கூடுதல் எஸ்பியும் டிஎஸ்பியும் நிகழ்விடத்தில் இருந்தும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.
காவலர் மகாராஜன், உன்னால் ஒண்ணும் புடுங்க முடியாதுடா என என்னை மிரட்டினார்.
தனது வாக்குமூலத்தை பதிவு செய்த தலைமைக் காவலர் ரேவதி அச்சத்துடனேயே இருந்தார். அவருடைய வாக்குமூலத்தை பதிவிட்ட பேப்பரில் கையெழுத்திட அவர், தயங்கியபோது முழு பாதுகாப்பு கொடுக்கப்படும் என கூறியதை அடுத்து அவர் கையெழுதிட்டார்.
காவலர்கள் சரியான முறையில், விசாரணைக்கு ஒத்துழைக்காததால் நான் பாதியிலேயே செல்லும் நிலை ஏற்பட்டது.
சாத்தான்குளம் சம்பவத்தின் நேரடி சாட்சியான காவல் நிலைய கண்காணிப்பு கேமராவில் சம்பந்தப்பட்ட பதிவுகளை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி, பதிவிறக்கம் செய்யும் பொருட்டு, மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து உதவி சிஸ்டம் ஆபிஸர் வரவழைக்கப்ப்டடார்.
மேலும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் சாத்தான்குளம் வட்டாட்சியர் உள்ளூர் புகைப்பட நிபுணர்களையும் சிசிடிவி கேமரா பதிவிறக்க உள்ளூர் நிபுணர்களையும் ஏற்பாடு செய்யப்பட்டு சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு வந்தனர்.
அப்போது சிசிடிவியின் ஹார்ட் டிஸ்க், உதவி சிஸ்டம் அதிகாரி முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டன. அதில் போதுமான ஸ்டோரேஜ், 1 டெரா பைட் இருந்த போதிலும் தினப்படி தானாகவே அழிந்து போகும் அளவிற்கு செட்டிங்ஸ் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
மேலும் சம்பவம் நடைபெற்ற நாளான ஜூ 19-ஆம் தேதி முதலாக எவ்வித விடியோ பதிவுகளும் கணினியில் இல்லை. அவை அழிக்கப்பட்ட நிலையில் இருந்தன.
முக்கிய நேரடி சாட்சியான அதன் தரவுகளை பதிவிறக்கம் செய்யும் பொருட்டு அது என்னால் கைப்பற்றப்பட்டு பாதுகாப்பில் வைக்கப்பட்டது.
மேலும் அதன் தொடர்ச்சியாக காவல் நிலைய பதிவுகள் தொடர்ந்து சரிபார்க்கும் பொருட்டு சாத்தான்குளம் வட்டாட்சியர் அவர்களை புதிதாக ஹார்ட் டிஸ்க் 500 ஜிபி உடனடியாக கொண்டு வரப்பட்டு அனைவரின் முன்னிலையிலும் பொருத்தப்பட்டு தொடர்ந்து இயக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டு ஆய்வாளர் பொறுப்பு அவர்களிடம் தகவல் அளிக்கப்பட்டது.
இவை அனைத்தும் காணொலியாக பதிவு செய்யப்பட்டது.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.