வாஷிங்டன்
கருத்துக் கணிப்பில் பின் தங்கி உள்ளதால் டிரம்ப் மனக்குழப்பம் அடைந்துள்ளதாகவும் அவர் அதிபர் தேர்தலில் இருந்து விலகலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்த வருடம் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் டெமாக்ரடிக் கட்சியின் சார்பில் ஜோ பிடன் மற்றும் ரிபப்ளிகன் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் ஆகியோர் போட்டியிட உள்ளனர். இந்த தேர்தல் குறித்து பிரபல அமெரிக்க ஊடகமான நியூயார்க் டைம்ஸ் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. இதில் டிரம்ப்பை விட ஜோ பிடன் 15% முன்னணியில் இருந்தார்.
இது அமெரிக்காவில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.க் ஒரு சில அரசியல் வாதிகள் தற்போது நடந்த கருத்துக் கணிப்பு மிகவும் சீக்கிரமாக நடத்தப்பட்டுள்ளதாகவும் போகப் போக நிலைமை மாறலாம் எனவும் தெரிவித்துள்ளனர். ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்த சிலர் இந்த முடிவுகளால் டிரம்ப் மிகவும் மனக்குழப்பம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
டிரம்ப் தனது டிவிட்டரில் “டெமாக்ரடிக் கட்சியினருக்கு வருத்தம் அளிக்கும் வகையில் எனது தேர்தல் வாய்ப்பு அதிகரித்து வருகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 2016 ஆம் வருடம் நிகழ்ந்ததைப் போல் தற்போதைய நியூயார்க் டைம்ஸ் கருத்துக் கணிப்பும் போலியானது. இதற்காக அவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்டு நான் வெற்றி பெறப்போகிறேன் என அறிவிப்பார்களா? மக்கள் சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை விரும்புகின்றனர்” எனப் பதிந்துள்ளார்.
இது குறித்து ரிபப்ளிகன் பிரபலங்களில் ஒருவர், “நான் கேள்விப்பட்டது எவ்வளவு உண்மை எனத் தெரியவில்லை. டிரம்ப் வெற்றி பெறுவது மிகவும் கடினம் எனக் கூறப்படுகிறது. இதனால் போட்டியில் இருந்து விலகலாம எனவும் அவர் எண்ணம் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதை வெளிக்காட்டாமல் டிரம்ப் செயல்பட்டு வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.