செல்போனில் ஓயாமல் பேச்சு.. குடும்பத்தைச் சிதைத்த படுகொலை.

மொபைல் போன்கள் மூலமாகக் கிடைக்கும் கூடா நட்புகள் இன்னும் எத்தனை குடும்பங்களைச் சீரழிக்கப்போகிறதோ தெரியவில்லை.

திருப்பூர் மாவட்டம் சத்யா நகர் விரிவு பகுதியைச் சேர்ந்தவர் 32 வயதான அப்துல் சமது தனியார் பனியன் கம்பெனி ஒன்றில் சூப்பர் வைசராகப் பணியாற்றி வந்திருக்கிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் நிஷா பானு (26) என்பவருக்கும் திருமணம் ஆகியிருக்கிறது.

இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது. நிஷா பானு ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தான நிலையில் இரண்டாவதாகத்தான் அப்துல் சமதுவைத் திருமணம் செய்திருக்கிறார்.

மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையில் மொபைல் போன் நண்பர்கள் மூலமாகச் சங்கடங்கள் ஆரம்பமாகின.  கடந்த சில மாதங்களாக நிஷா சதா சர்வ நேரமும் மொபைல் போனில் பேசிக் கொண்டிருப்பதையே வாடிக்கையாகக்  கொண்டிருந்திருக்கிறார்.

ஆரம்பத்தில் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத அப்துல் சமது இப்பழக்கம் அதிகமானதால் அவ்வப்போது இது பற்றிக் குறிப்பிட்டுச் சண்டையிட்டிருக்கிறார்.  ஒரு கட்டத்தில் இது எல்லை மீறிவிட மனைவியை அனாவசியமாக இதுபோல் போனில் பேசுவதை நிறுத்தச்சொல்லி கடுமையாகக் கண்டித்திருக்கிறார். ஆனாலும் இவர் இப்பழக்கத்தை நிறுத்தியபாடில்லை.  தொடர்ந்து நிஷா பானு தொடர்ந்து செல்போனில் நண்பர்களுடன் அரட்டையடித்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில், நேற்றிரவு அப்துல் சமது வீட்டுக்கு வந்தபோது நிஷா பானு யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார். “யார்கிட்ட பேசிக்கிட்டு இருக்க, போனைக் குடு” என அப்துல் சமது போனை பிடுங்க முற்பட, நிஷா பானு தர மறுத்துள்ளார்.  இதன் தொடர்ச்சியாக இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே நிஷாவின் இந்த நடவடிக்கையால் கடும் கோபத்துடனேயே இருந்த அப்துல் சமது, கோபத்தின் உச்சிக்குச் சென்று அருகிலிருந்த குக்கரை எடுத்து மனைவியின் தலையில் ஓங்கி அடித்திருக்கிறார். தலையில் விழுந்த அடியால் நிஷா பானு சுருண்டு விழுந்திருக்கிறார். அப்போதும் தணியாத கோபத்தில், அருகில் இருந்த கத்தியை எடுத்த அப்துல் சமது, மனைவியின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்திருக்கிறார்.

பின்பு கோபம் தணிந்த நிலையில் நடந்ததை உணர்ந்து நேரடியாகக் காவல் நிலையத்திற்குச் சென்று நடந்ததை பற்றிக் கூறி சரணடைந்திருக்கிறார்.  சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

– லெட்சுமி பிரியா