சென்னை:

சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 30 பேர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82,275 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று  1,992 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில், பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை   53,762 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து மொத்தம் 31,858 குணமடைந்துள்ளனர்.   21,094 பேர் மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சென்னையில் மட்டும் 809 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 10 மணி வரை இடைப்பட்ட சுமார் 16 மணி நேரத்தில் 30 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி,   சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில்  13 பேரும், ஒமந்தூரார்  பல்நோக்கு அரசு மருத்துவமனையில் 89 வயது மூதாட்டி உள்பட 5 பேரும், ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர், சென்னை கே.எம்.சி மருத்துவமனையில் ஓய்வு பெற்ற உதவி காவல் ஆயவாளர் உள்பட 4 பேர் ,  ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர்கள் 3 பேர்  உள்பட மொத்தம் 30 பேர் உயிரிழந்து இருப்பதாக கூறப்படுகிறது.