வாடகையைக் குறைத்தும் காலியாக கிடக்கும் வீடுகள்..

சென்னையில் வசித்து வந்த வெளியூர் வாசிகளை, கொரோனா தொற்று ஓட ஓட சொந்த ஊர்களுக்கு விரட்டி விட்டது.
இதனால் சென்னை மற்றும் புறநகர்களில் ஆயிரக்கணக்கான வாடகை வீடுகள் காலியாக கிடக்கின்றன.
வீட்டின் சொந்தக்காரர்கள் வாடகையை 20 சதவீதம் வரை குறைத்தும், வீடுகளுக்கு யாரும் வந்த மாதிரி இல்லை.
சென்னையைப் பொறுத்தவரை தியாகராயநகர், ஆழ்வார்பேட்டை மற்றும் தேனாம்பேட்டை பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக ஏகப்பட்ட வாடகை வீடுகள் காலியாக உள்ளன.
இதனால் வீட்டு உரிமையாளர்கள் மட்டுமின்றி, வீட்டு புரோக்கர்களும் நொந்து நூலாகி விட்டார்கள்.
ஒரு புரோக்கரின் புலம்பல் இது:
‘’ நான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டு புரோக்கராக இருக்கிறேன். கொரோனா காலத்துக்கு முன்பாக ’’வாடகைக்கு வீடு வேண்டும்’’ என கேட்டு தினம்தோறும் குறைந்த பட்சம் 20 போன்கள் வரும். இப்போது வாரத்துக்கு ஒரு போன் அழைப்பு வந்தாலேயே அதிசயம்’’ என்று சலித்துக்கொண்டார், அந்த புரோக்கர்.
’’கொரோனா பாதிப்பு இதே நிலையில் தொடர்ந்தால், வீட்டு வாடகை பாதியாக குறைந்தால் கூட ஆச்சர்யம் இல்லை’’ என்கிறார்கள், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள, ஏஜெண்டுகள்.
-பா.பாரதி