திருவனந்தபுரம்

கேரளாவை விட்டு வேறு மாநிலம் சென்று வந்த 109 பேருக்கு கொரோனா உறுதி ஆனதை அடுத்து அவர்களுடன்  தொடர்பு கொண்டோரைத் தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் கொரோனா நோயாளி கேரள மாநிலத்தில் கண்டறியப்பட்டார்.  அதன் பிறகு கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ள மாநிலமாக கேரளா இருந்து வந்தது.  மாநில அரசின் தீவிர முயற்சியால் கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்தது.   தற்போது மீண்டும் கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதுவரை கேரள மாநிலத்தில் 4190 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 23 பேர் உயிர் இழந்து 2150 பேர் குணம் அடைந்துள்ளனர்.    இந்நிலையில் கேரள மாநிலத்தில் சமூக பரவல் தொடங்கி உள்ளதால் மீண்டும் பாதிப்பு அதிகரித்துள்ளதாக ஒரு தகவல் கிளம்பியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.   கேரள முதல்வர் பிணராயி விஜயன் மாநிலத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது குறித்து கவலை தெரிவித்தார்.

இது குறித்து கேரள மாநில கொரோனா தடுப்பு அதிகாரி டாக்டர் அமர் ஃபெட்டில், ”கொரோனா பாதிப்பு ஒரே இடத்தில் கொத்தாக ஏற்படுவதால் அதை சமூக பரவல் எனக் கூற முடியாது.  உதாரணமாக 15 முதல் 20 பேர் ஒரே மருத்துவமனையில் பாதிக்கப்பட்டால் அதற்குக் காரணம் பிபிஇ  உடைகளை அணியாதது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றாததாகவும் இருக்கலாம்.  அது சமூக பரவல் அல்ல.

தற்போது பாதிக்கப்பட்டவர்களில் 109 பேர் வெளி மாநிலங்களுக்குச் சென்று வந்துள்ளனர். குறிப்பாகத் தமிழகத்துக்கு அதிகம் பேர் சென்று வந்துள்ளனர்.  இந்த 109 பேருடன் தொடர்பில் இருந்தோர் யார் எனத் தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.  இந்த 109 பேர் குறித்த விவரங்களை அந்தந்த மாவட்ட அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.  அதன் அடிப்படையில் அவர்களும் பரிசோதிக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.