ஆக்ஸிஜன் கொடுக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள, நோயெதிர்ப்பு மண்டலத்தின் அதிகப்படியான தொற்று எதிர்ப்பு செயல்பாடுகள் தூண்டப்பட்ட நிலையில் உள்ள மிதமான மற்றும் கடுமையான COVID-19 நோயாளிகளுக்கு இப்போது மெத்தில்பிரெட்னிசோலோனுக்கு மாற்றாக டெக்ஸாமெதாசோன் என்ற ஸ்டீராய்டு மருந்தைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அதன் திருத்தப்பட்ட COVID-19 மருத்துவ மேலாண்மை நெறிமுறையில் மலிவான கார்டிகோஸ்டீராய்டு மருந்தான டெக்ஸாமெதாசோனைச் சேர்த்துள்ளது. இதனை இப்போது மெத்தில்பிரெட்னிசோலோனுக்கு மாற்றாக பயன்படுத்தலாம்.
டெக்ஸாமெதாசோன் என்பது மலிவான விலையில் கிடைக்கக்கூடிய ஸ்டீராய்டு மருந்து ஆகும். நோய்கிருமி தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு மண்டலம் உருவாக்கும் அதிகப்படியான நோயெதிர்ப்பு செயல்பாடுகளை (Inflammation) கட்டுப்படுத்தும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் சில சமயங்களில் அதிகப்படியான தொற்று எதிர்ப்பு செயல்பாடுகள் எதிர்விளைவுகளை உண்டாக்கி நோயாளிக்கு ஆபத்தாக முடியலாம். மேலும், ஆஸ்துமா மற்றும் முடக்கு வாதம் போன்ற பல நிலைகளுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
COVID-19 சிகிச்சையில் இந்த மருந்தின் பயன்பாட்டை மதிப்பிடுவதற்கான சமீபத்திய மருத்துவ சோதனைகள் சாதகமான ஆரம்ப முடிவுகளைக் காட்டியது. சோதனையின் ஒரு பகுதியாக, டெக்ஸாமெதாசோன் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படும் நிலையில் இருந்த நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கும், ஆக்சிஜன் கொடுக்கப்பட வேண்டிய நோயாளிகளில் ஐந்தில் ஒரு பங்கு என இறப்புகளைக் கட்டுப்படுத்தும் திறனைக் காட்டியது.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த மருந்து, மலிவானது, நமது வீட்டு அலமாரியில் உள்ளது போன்று எளிதாகக் கிடைக்கக்கூடியது. மேலும் உலகெங்கிலும் உள்ள உயிரைக் காப்பாற்ற உடனடியாகப் பயன்படுத்தலாம். இந்தியாவில் உள்ள மருந்து உற்பத்தியாளர்கள், நமது உள்நாட்டு தேவைக்கான அளவை எட்டும் அளவுக்கு இந்த மருந்துகளை உற்பத்தி செய்ய போதுமான திறன் இருப்பதாக கூறியுள்ளனர். நன்று!!!
தமிழில்: லயா