லாஸ்ஏஞ்சலிஸ்: ஃபேஸ்புக் நிறுவனத்திற்கான விளம்பரங்களை சில நிறுவனங்கள் விலக்கிக் கொண்டுள்ளதால், மார்க் ஸூக்கர்பெர்க்கின் நிறுவனத்திற்கு 7.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வெறுப்பு பிரச்சாரங்கள் தொடர்பாக, ஃபேஸ்புக் நிறுவனம் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத காரணத்தால், ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விளம்பரங்களைத் தருவதில்லை என்று சில நிறுவனங்கள் முடிவு மேற்கொண்டுள்ளன.
யுனிலிவர், வெரிஸான், கோககோலா, பென் அண்ட் ஜேர்ரிஸ், ஹெர்ஷேய்ஸ், நார்த் ஃபேஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்த முடிவை மேற்கொண்டுள்ளன.
நேற்றைய தினத்தில் சமூக ஊடக நிறுவனத்தின் பங்குகள் 8.3% அளவிற்கு வீழ்ச்சியடைந்தன. கடந்த 3 மாதங்களில் இதுதான் மிகப்பெரிய வீழ்ச்சியாகும். சமூக ஊடக நெட்வொர்க்கில் விளம்பரம் தரக்கூடிய ‘யுனிலிவர்’ என்ற ஒரு பெரிய நிறுவனம், சமூக ஊடக நிறுவனத்திற்கு விளம்பரம் தருவதில்லை என்று முடிவெடுத்த காரணத்தால், இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஃபேஸ்புக் தொடர்பான நிறுவனங்களில், இந்தாண்டு எந்த விளம்பர முதலீட்டையும் மேற்கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளது யுனிலிவர். அந்நிறுவனத்தின் இத்தகைய முடிவால், ஃபேஸ்புக் நிறுவனத்தின் சந்தை மதிப்பில் 56 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்பட்டு, மார்க் ஸூக்கர்பெர்க் நிறுவனத்தினுடைய மொத்த மதிப்பு 82.3 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இறங்கியது.
இந்த சரிவின் மூலம், உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தைப் பெற்றிருந்த மார்க் ஸூக்கர்பெர்க், ஒருபடி கீழே இறங்கி, நான்காவது இடத்திற்கு சென்றுவிட்டார். முதல் மூன்று இடங்களில் ஜெஃப் பெஸோஸ், பில் கேட்ஸ் மற்றும் பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோர் உள்ளனர்.