சென்னை:

சென்னை அயனாவரத்தில் அமைந்துள்ள  ரயில்வே மருத்துவனையில், சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் இல்லாத நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ரயில்வே உயர்அதிகாரி ஒருவர் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.  இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ஐசிஎப் அருகே, ரயில்வே தொழிலாளர்களுக்கான அனைத்து வசதிகளும் கொண்ட  சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. ரயில்வே தொழிலாளர்கள் இந்த மருத்துவமனை யிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா நோயால் அங்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் மரணம் அடைவது குறித்து தமிழகஅரசுக்கு தகவல் தெரிவிக்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து,  கொரோனா தொற்றால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து முறையாக தெரியப்படுத்தாதது குறித்து விளக்கம் அளிக்க கோரி ரயில்வே மருத்துவமனை நிர்வாகத்திற்கு தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில், தெற்கு ரயில்வே திட்டப் பிரிவில் சிக்னல் மற்றும் டெலிகாம் பிரிவின்  49 வயதான அதிகாரி ஒருவர், மூச்சுத்திணறல் காரணமாக,  பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு சளி சோதனை எடுக்கப்பட்டது. ஆனால், அதற்கான உடனடி  பரிசோதனை செய்வதற்கு உரிய உபகரணங்கள் ச இல்லாததால்,  அந்த அதிகாரி  அடுத்த  30 நிமிடத்தில் இறந்தார்.

கொரோனா நோய் பாதிப்பால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தெற்கு ரயில்வே உயர்அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து, கொரோனா பரிசோதனைக்கு தேவையான கருவிகள், துடிப்பு ஆக்சிமீட்டர்களை உடனே  வாங்கவும், அனைத்து ரயில்வே அதிகாரிகளுக்கும் வீட்டு தனிமை / தனிமைப்படுத்தலில் இருப்பவர்களுக்கு அவற்றை வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.