தாநகர்

ருணாசலப்பிரதேச எல்லையில் சீனப்படைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளன எனத் தாம் கூறியது உண்மையே என பாஜக எம் பி தாபிர் காவ் தெரிவித்துள்ளார்.

அருணாசலப் பிரதேச பாஜக மக்களவை உறுப்பினர் தாபிர் காவ் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.  அவர் அருணாசலப் பிரதேச மாநிலத்தில் சீனப்படைகள் எல்லை தாண்டி உள்ளே புகுந்ததாகவும் அஞ்சாவ் மாவட்டத்தில் ஒரு மரப்பாலத்தை கட்டி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  இதற்கு இந்திய ராணுவம் உடனடியாக மறுப்பு தெரிவித்தது.

ஆயினும் கடந்த நவம்பர் மாதம் மக்களவையில் தாபிர் காவ் அதே எச்சரிக்கையைத் தெரிவித்தார்.  அப்போது அவர் மீண்டும் டோக்லாம் சம்பவம் போல ஏதும் அருணாசலப் பிரதேச இந்தியச் சீன எல்லையில் நிகழலாம் எனத் தெரிவித்தார்.   தற்போது லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த சீன மோதலுக்குப் பிறகு தாபிர் காவ் மீண்டும் செய்திகளில் வலம் வர ஆரம்பித்துள்ளார்.

அவர் சீனப் படையினர் தொடர்ந்து அருணாசலப் பிரதேசத்தில் கண்காணிப்பு நடத்தி வருவதாகத் தெரிவித்தது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.    தாபிர் காவ் கூறியதைக்  காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்களும் சுட்டி காட்டி  இது குறித்து அரசை விளக்கம் கேட்டனர்.

இந்நிலையில் தாபிர் காவ் ஒரு செய்தி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “சீன ஆக்கிரமிப்பு இன்னும் அருணாசலப் பிரதேசத்தில் உள்ளது.  இதில் எவ்வித மாற்றமும் இல்லை. சீனப்படைகள் மக்மோகன் எல்லையைக் கடப்பது புதிய நிகழ்வு இல்லை.

இது போல் பல இடங்களில் சீனப்படைகள் எல்லை தாண்டி வந்துள்ளன.  இது எல்லைக் கோட்டுப்பகுதியில் உள்ள அசபில்லா, அண்ட்ரெல்லா சமவெளி, ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளன.

இதை இந்திய ராணுவம் மறுத்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் அசபில்லா பகுதியைச் சேர்ந்த உள்ளூர் வாசிகளைச் சீன ராணுவம் பிடித்தது.  இந்திய ராணுவ தலையீட்டுக்குப் பிறகு அவர்கள் விடுவிக்கபட்டனர்.  சீன ராணுவம் இந்தியப் பகுதியில் இல்லை என்றால் இந்த அசபில்லா வாசிகளை எவ்வாறு சீன ராணுவம் பிடித்தது?

ராணுவத்தினரை என்னைச் சந்திக்குமாறு அரசு சொல்ல வேண்டும்.  நான் எனது நாட்டுக்கு எதிராகப் பொய் சொல்ல மாட்டேன். சீனப்படைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக நான் சொல்வது  உண்மையே.  இதை நான் 100% உறுதி செய்வேன். இது குறித்து நான் பிரதமர், பாதுகாப்பு அமைச்சர்  வெளியுறவு அமைச்சர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கு கடிதங்கள் எழுதி உள்ளேன்.

இதற்குக் கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் நேரத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் எனக்குப் பதில் அனுப்பினார்.  அதில் நான் தெரிவித்ததையே எனக்கு அவர் மீண்டும் தெரிவித்தார்.

நமது அரசு அருணாசலப் பிரதேச மாநில நலனுக்காக மட்டுமின்றி நாடு முழுமைக்கும் பாதுகாக்க எல்லைப் புறங்களில் சாலைகள் அமைக்க வேண்டும்.

இந்த சாலை அமைக்கும் நடவடிக்கைகளை நேரு காளத்தில்இருந்து நரசிம்ம ராவ் காலம் வரை காங்கிரஸ் செய்யவில்லை.   சாலை அமைக்காமல் அங்கு பிரச்சினைகளை வளர்த்த காங்கிரஸ் அதை தற்போதைய அரசின் குறை என பிரதமர் மோடியை அவர்கள் குறை சொல்கின்றனர்.

பாஜக அரசு இன்னும் ஒரு வருடத்தில் சாலைகள் அமைக்கும் என உறுதி அளித்துள்ளது.  இது 200 முதல் 300 கிமீ தூரமுள்ள சாலைகளாக இருக்கும்” எனக் கூறி உள்ளார்.