கோவை:

கொரோனா பரவலை தடுக்க என்ன ஆலோசனை வழங்கியிருக்கிறார், ஸ்டாலின்”  என்று தமிழக  முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களிடையே கேள்வி எழுப்பினார்.

கோவை சென்றுள்ள தமிழக முதல்வர் அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கை, அத்திகடவு அவினாசி திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,  கோவை மாவட்டத்தில் இதுவரை  36,905 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. தற்போதைய நிலையில்  292 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 112 பேர் சிகிச்சையில் உள்ளனர். மற்றவர்கள் நோய் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழக அரசு  கொரோனா குறித்து மக்களுக்கு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.  மாவட்டங்கள் தோறும் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிப்பு  போன்ற முன்னெச்சரிக்கை  நடவடிக்கையால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

கொரோனா பரவலை தடுக்க கோவை மாவட்ட நிர்வாகம் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 2ஆயிரம் பரிசோதனைகளை செய்து வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில், எதிர்க்கட்சித் தலைவர்,  தமிழக அரசு  சரியான முறையில் தடுப்பு  நடவடிக்கை சரியாக இல்லை பொய் குற்றச்சாட்டு கூறுகிறார், நாட்டிலேயே நோயை வைத்து அரசியல் செய்து வரும் ஒரே தலைவர் மு..க.ஸ்டாலின்தான் , அவர் இதுவரை,  கொரோனாவை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான கருத்தை ஸ்டாலின் கூறவில்லை, தான் அரசியலில் இருப்பதை காட்டிக் கொள்ளவே தினமும் அறிக்கை வெளியிடுகிறார் என்று கடுமையாக சாடினார்.

நான் சேலத்திற்கு மட்டும் முதல்வராக இருப்பதாக ஸ்டாலின் கூறி வருகிறார்,  நான்  ஒவ்வொரு மாவட்டத்திலும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்துவருகிறேன். கொரோனா தடுப்பு குறித்து மாவட்ட வாரியாக ஆலோசனை நடத்தப்படும் என்று கூறியவர்,  கொரோனா தடுப்பு குறித்து 16 முறை ஆலோசனை நடத்தி உள்ளேன், மாவட்ட ஆட்சியர்களுடன் 7 முறை ஆலோசனை நடத்தியுள்ளேன்”,  13 பேர் கொண்ட குழுவின் ஆலோசனை 3 முறை நடந்துள்ளது  என்றும் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் குடிமராமத்து பணி சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது அத்திக்கடவு அவிநாசி திட்டம் டிசம்பருக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்றும்,  பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டம் உள்ளிட்ட திட்டங்களை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். கோவை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

மேலும், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் காவல்துறை கனிவாக நடந்து கொண்டு, அன்பை பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.