கோவை:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கோவையில் ஆய்வு செய்து வரும் நிலையில், ரூ.239 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம் இன்று காலை 11.30 மணி அளவில் தொடஙகியது. கூட்டத்தில், மாவட்ட வளர்ச்சிப் பணிகள், கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கை, அத்திக்கடவு அவிநாசி திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.
முன்னதாக ரூ.239 கோடியில் திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன்படி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் பில்லூர் மூன்றாம் குடிநீர் அபிவிருத்தி திட்டம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிறப்பு ஏற்பாடாக 10 லட்சம் குடும்பங்களுக்கு கபசுரக் குடிநீர், வைட்டமின் மாத்திரைகள், ஜிங்க் மாத்திரைகள், ஆர்சானிக் ஆல்பம் ஆகியவை அடங்கிய நோய் எதிர்ப்பு சக்தி தொகுப்பு பெட்டகத்தை பயனாளிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி துவக்கி வைத்தார்.
மேலும் பொலிவுறு நகரத் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் கோவை உக்கடம் பெரியகுளத்தில் ரூ.39.74 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவையும், வாலாங்குளத்தில் ரூ.23.83 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பூங்காவையும் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.
வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ரூ.2 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் அன்னூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்புக் கட்டிடத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் 2 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குப் புதிய கட்டிடத்தையும் திறந்து வைத்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.2 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புதிய கட்டிடத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.
மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 60 லட்சம் மதிப்பீட்டில் செட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார மையக் கட்டிடத்தை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
இதையடுத்து, அனைத்து அரசுத் துறை அலுவலர்களுடன் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்தும், வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தொழில் கூட்டமைப்பினருடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
கோவை மாவட்டம் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம். பெரும் தொழில்கள், சிறு தொழில்கள் அதிகம் உள்ள மாவட்டம் இது. டெக்ஸ்டைல் தொழிலில் முதன்மை மாவட்டமாக திகழ்கிறது. தொழிற் கூட்டமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர். இதுகுறித்து அரசு பரிசீலிக்கும் என்று முதல்வர் எடப்பாடி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அம்மன் கே. அர்ச்சுணன், பி.ஆர்.ஜி. அருண்குமார், ஆறுக்குட்டி, கந்தசாமி, எட்டிமடை சண்முகம், கஸ்தூரி வாசு, மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண் குமார் ஜடாவத், மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.