சென்னை:

கொரோனா ஊரடங்குகாரணமாக  ஈரான் நாட்டில் சிக்கியுள்ள  743 தமிழர்களை மீட்க, தூத்துக்குடியிலிருந்து புறப்பட்ட ஐ.என்.எஸ் ஜலாஷ்வா சிறப்புக் கப்பல் ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்திற்கு சென்றடைந்தது.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியா உள்பட 200க்கும் மேற்பட்ட நாடுகளை வெறித்தனமாக வேட்டையாடி வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு அமல்படுத்தி, தொற்று பரவலை தடுத்து வருகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 743 மீனவர்கள் ஒப்பந்த அடிப்படையில் ஈரான் நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.  அவர்கள் தாயகம் திரும்ப விரும்பிய நிலையில், அங்கு விமான சேவையும் முடக்கப்பட்டுள்ளதால்,  தாயகம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் ஈரான் நாட்டில் உள்ள தமிழக மீனவர்களை விரைவில் தமிழகம் அழைத்துவர அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்திய தூதரக அதிகாரிகள் ஈரானில் தங்கியுள்ள மீனவர்களை நேரில் சென்று சந்தித்து அம்மீனவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் அத்தியாவசிய தேவையான உணவு மற்றும் பிற வசதிகள் அனைத்தும் கிடைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக, ஈரான் நாட்டில் இருக்கும் தமிழக மீனவர்களை தமிழகம் அழைத்துவர  ஐ.என்.எஸ் ஜலாஷ்வா சிறப்புக் கப்பல் இன்று (25/06/2020)  ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்திற்கு சென்றடைந்தது.

ஐ.என்.எஸ் ஜலாஷ்வா சிறப்புக் கப்பல் மூலம் தமிழகத்தினை சேர்ந்த 673 மீனவர்கள் விரைவில் தூத்துக்குடி துறைமுகம் வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.