சென்னை:
கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள சென்னையில் யாரும் நடை பயிற்சி செல்லக்கூடாது என்று மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் அறிவித்து உள்ளார். மீறி செல்வோரிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறி வரும் ஆணையாளர் பிரகாஷ் இன்று செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை கூறினார். மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவு மட்டுமின்றி கையுறை, முகக்கவசம் போன்றவை வழங்கப்பட்டு வருவதாக கூறியிருந்தார். (ஆனால் ஏதும் தரப்படுவது இல்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்)
இந்த நிலையில், சென்னையில் பொதுமக்கள் நடை பயிற்சி செல்ல தடை விதிக்கப்படுவதாகவும் அதிரடியாக அறிவித்து உள்ளார். மீறி நடை பயிற்சி சென்றால், அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.
மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கும் வகையில் இந்தநடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையல், சென்னையில் நடைபயிற்சி சென்றவர்களிடம் ரூ.100 முதல் ரூ.300 வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ள தகவலும் வெளியாகி உள்ளது.
சென்னையில் வசித்து வரும் ஏராளமானோர் சர்க்கரை நோய் உள்பட பல்வேறு நோய பாதிப்புக்கு ஆளாகி உள்ள நிலையில் அவர்கள் நடைபயிற்சி செய்ய வேண்டியது அவசியம். ஆனால், தற்போது நடைபயிற்சிக்கு செல்லவே தடை விதித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.