புதுடெல்லி: காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி மீண்டும் விரைவில் பதவியேற்பார் என்று தொடர்புடைய செய்திகள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில், தலைவர் பதவியை மீண்டும் ராகுல் ஏற்க வேண்டுமென்று தலைவர்கள் பலர் வலியுறுத்தியதை அவர் மறுக்கவில்லை என்பதை சுட்டிக் காட்டுகின்றனர் விபரமறிந்த வட்டாரங்கள். ஆனால், முந்தைய காலங்களில் இத்தகைய வேண்டுகோள்களை வன்மையாக மறுத்துவந்துள்ளார் ராகுல் காந்தி.
இந்தியா – சீனா எல்லைப் பிரச்சினை, கொரோனா நெருக்கடி, நாட்டின் பொருளாதார நிலை உள்ளிட்டவைகள் பற்றி விவாதிக்க கூடியது காங்கிரஸ் காரியக் கமிட்டி. ஆனால், இந்தக் கூட்டம், அந்த விஷயங்களைவிட, காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி, மீண்டும் பதவியேற்க வேண்டும் என்று வற்புறுத்துவதிலேயே கவனம் செலுத்தியது.
“தற்போது தற்காலிக காங்கிரஸ் தலைவராக இருக்கும் சோனியா காந்தி, மிக முக்கியப் பிரச்சினைகளை அரசுக்கு எதிராக எழுப்பிவரும் சூழலில், அதற்கு பொருத்தமான ஒருவர் களத்தில் இருக்க வேண்டியது அவசியம். எனவே, இதற்கு ராகுல் காந்திதான் மிகவும் பொருத்தமானவர்” என்று தெரிவித்தார் கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் ஒருவர்.
“காரியக் கமிட்டி கூட்டத்தில் கலந்துகொண்ட பல மூத்த தலைவர்கள், இதே கருத்தை வலியுறுத்தினர்” என்றார் அவர்.