டில்லி

ராகுல் காந்திக்கு மீண்டும் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பு அளிக்க வேண்டும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாத் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.  அப்போதைய காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.   இதில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தோல்வி அடைந்தார்.

கட்சியின் தோல்விக்குப் பொறுப்பு ஏற்று ராகுல் காந்தி தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பல மூத்த தலைவர்கள் வற்புறுத்தியும் அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.  தற்போது சோனியா காந்தி இடைக்கால தலைவராகப் பதவியில் உள்ளார்.

இன்று நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராக வேண்டும் என ராஜஸ்தான் முதல்வர்  அசோக் கெலாத் கூறி உள்ளார்.  இதற்கு சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் மற்றும் இளைஞர் அணித் தலைவர் ஸ்ரீநிவாஸ் ஆகியோரும் ஒப்புதல் அளித்துள்ளனர்.

விரைவில் காங்கிரஸ் கட்சியின் காணொளி காட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு ராகுல் காந்தி தலைவராக தேர்வு செய்யப்படுவார் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.