திருவனந்தபுரம்
வானிலை முன்னறிவிப்புக்காக கேரள அரசு மூன்று தனியார் நிறுவனங்களை ரூ. 95.64 லட்சம் கட்டணத்தில் நியமித்துள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த 2018 ஆம் வருடம் கடும் வெள்ளம் ஏற்பட்டது. அத்துடன் 2019 ஆம் வருடம் மீண்டும் நிகழ்ந்த வெள்ளத்தினால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் நாடெங்கும் அதிகரித்து வரும் நிலையில் இந்த வருடம் மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்பட்டால் அது மாநிலத்துக்கு பேரிழப்பை அளிக்கும் எனக் கேரள முதல்வர் தெரிவித்து இருந்தார். இந்த வருடமும் அதிக மழை பெய்யலாம் என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே இம்முறை மிகவும் முன்னேற்பாட்டுடன் இருக்கக் கேரள அரசு முடிவு செய்துள்ளது, இதையொட்டி கேரள அரசு மூன்று தனியார் நிறுவனங்களை வானிலை முன்னெச்சரிக்கை பணிக்கு ரூ.95,64,964 கட்டணத்தில் நியமித்துள்ளது. அவை ஸ்கைமெட் வெதர், ஐபிஎம் வெதர் கம்பெனி, மற்றும் எர்த் நெட்வொர்க்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களாகும். இதற்கான உத்தரவுக்குக் கடந்த 19 ஆம் தேதி அன்று கேரள அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுவரை கேரள அரசு இந்திய வானியல் ஆய்வுத் துறையை மட்டுமே வானிலை முன்னெச்சரிக்கைக்கு நம்பி இருந்தது. இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் கேரள அரசின் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு மேலும் அதிக அளவில் வானிலை முன்னறிவிப்புக்கள் கிடைக்க உள்ளது. இதற்காக ஸ்கைமெட் வெதர் நிறுவனத்துக்கு ரூ.16,81,500 : எர்த் நெட் ஒர்க்ஸ் நிறுவனத்துக்கு ரூ51,79,020 மற்றும் ஐபிஎம் வெதர் கம்பெனிக்கு ரூ. 27,04,444 கட்டணம் செலுத்த உள்ளது.
இந்த நிறுவனங்களின் சேவை சோதனை அடிப்படையில் ஒரு வருடத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது இந்த மூன்று நிறுவனங்களும் கேரள மாநில பேரிடர் மேலாண்மை துறையுடன் இணைந்து செயல்பட உள்ளன. இதற்காக ஒவ்வொரு நிறுவனமும் ஆங்காங்கே வானிலை ஆய்வு மையங்களை நிறுவி உள்ளன.