வாஷிங்டன்: ஏர் இந்தியா சிறப்பு விமானங்கள் அமெரிக்கா செல்ல சில கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்துள்ளது.

கொரோனா வைரஸ், லாக்டவுன் காரணங்களால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாய் நாட்டுக்கு அழைத்து வரும் பணிகளில் ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இருநாடுகளுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து உடன்படிக்கையை மீறி நியாயமற்ற செயல்களில் ஈடுபடுவதாக ஏர் இந்தியா சிறப்பு விமானங்களுக்கு அமெரிக்கா சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இது குறித்து அமெரிக்கப் போக்குவரத்துத் துறை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பொதுமக்களுக்கு டிக்கெட் கட்டணங்களையும் ஏர் இந்தியா வசூலிக்கிறது.

அதே வேளையில் அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா கொரோனா கால தடை விதித்துள்ளது. சிறப்பு விமானங்கள் இந்தியர்களை இந்தியாவுக்கு அழைத்துச் செல்லும் திட்டத்தையும் தாண்டி வணிக ரீதியாகச் செயல்படுகிறது.

இந்தியர்களை அழைத்துச் செல்கிறோம் என்று கூறியபடி, ஏர் இந்தியா பல்வேறு வணிக ரீதியான போக்குவரத்துச் செயல்களிலும் ஈடுபடுகிறது. பல விதங்களில் அமெரிக்காவின் விமானச் சேவை கட்டுப்பாடுகளை மீறி வருகிறது.

இதனையடுத்து சிறப்பு விமானங்களை இயக்குவதற்கு முன் இந்தியா இனி போக்குவரத்துத் துறையிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும். எனவே அதன் செயல்பாடுகளை தீவிரமாகக் கண்காணித்து அனுமதிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.