ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவியில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதிதான் முதல் கொரோனா கேஸ் பாதிப்பு ஏற்பட்டது. அதே நாளில் அங்கு கொரோனா காரணமாக மரணமும் ஏற்பட்டது. அப்போது தொடங்கிய பாதிப்பு வேகமாக வேகமாக அதிகரித்தது.
முதலில் அங்கு பலிகா நகர் என்று மக்கள் குறைவாக வசிக்கும் இடத்தில் கொரோனா வந்தது. ஆனால் போக போக அங்கு கேஸ்கள் அதிகரித்து முகுந்த் நகர் போன்ற அதிக நெருக்கடியாக குடிசை பகுதியிலும் கூட கொரோனா வந்தது. 10க்கு 10 வீட்டில் 5-7 பேர் வசிக்கும் நெருக்கடியான இடத்தில் கொரோனா வந்தது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அலெர்ட் ஆன மாநில அரசு உடனடியாக அங்கு பணிகளை தொடங்கியது.
உடனடியாக அங்கு சாலைகள் எல்லாம் மூடப்பட்டது. 48 மணி நேரத்தில் தாராவியின் அனைத்து தெருக்களும் மூடப்பட்டது. அங்கு இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் மருந்து அடிக்கப்பட்டது. 425 பொது கழிப்பிடங்கள் மொத்தமாக சுத்தப்படுத்தப்பட்டது. வீடு வீடாக சோதனையை தொடங்கி அரசு செய்தது. முதல் கட்டமாக தாராவியை வெளி உலகில் இருந்து தனிமைப்படுத்தியது. மொத்தம் 8.5 லட்சம் பேர் கொரோனா அறிகுறி சோதனை செய்யப்பட்டார்கள்.
இதற்காக பெரிய அளவில் மருத்துவ குழுக்கள் மற்றும் 350 தனியார் மருத்துவமனைகள், பயிற்சி மையங்கள் களமிறக்கட்டன. மேலும் இச்சோதனைகள் அதிவிரைவாக மேற்கொள்ளப்பட்டன. இச்சோதனை முடிவில் கொரோனா உள்ளவர்கள், அறிகுறி உள்ளவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பு கொண்டவர்கள் ஆகியோர் மட்டும் தான் தனிமைப்படுத்தப்பட்டனர். இப்படி தனிமைப்படுத்தப்பட்ட எல்லோரும் முறையாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர்.
நேற்று வரை தாராவியில் 2158 கேஸ்கள் மட்டுமே வந்துள்ளது. மகாராஷ்டிராவின் மற்ற இடங்களை விட இது குறைவுதான். அங்கு தினசரி கேஸ் அதிகரிப்பு 1.57% ஆக உள்ளது. மாநிலத்தின் கேஸ் அதிகரிப்பு 3.2% ஆக உள்ளது. அங்கு மே 30-ம் தேதியில் இருந்து ஜூன் 8 வரை பலி எண்ணிக்கை எதுவும் பதிவாகவில்லை. அதன்பின் 7 பேர் மட்டுமே பலியாகி உள்ளனர். 2400 சதுர கிலோ மீட்டர் கொண்ட மிகப்பெரிய குடிசை பகுதி இது. அங்கு கொரோனா மோசமாக பரவும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெகு திறமையாக இதனை கட்டுப்படுத்தியுள்ளனர்.