டெல்லி:
3 நாள் பயணமாக மதிதிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ரஷ்யா புறப்படுகிறார். அவரது பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
2ம் உலகப்போரின் வெற்றியை கொண்டாடும் வகையில் ரஷியா, அதன் 75-வது நினைவு தினத்தை வரும் 24ந்தேதி பிரமாண்டமாக கொண்டாட உள்ளது. அப்போது நடைபெறும் ராணுவ அணி வகுப்பில் இந்தியா, சீனா உள்பட 21 நாடுகள் பங்கேற்கின்றனர்.
இதில் கலந்துகொள்ள இந்தியாவுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், இந்தியா சார்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்துகொள்கிறார்.
இந்தியா, சீனா இடையே லடாக் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்த நிகழ்வு கனகனவென எரிந்துகொண்டிருக்கும் நிலையில், நமது பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த அணிவகுப்பில் பங்கேற்க இந்தியாவின் முப்படைகளில் இருந்து 75 வீரர்களை கொண்ட குழு ஒன்று ஏற்கனவே ரஷியா சென்று உள்ளது குறிப்பிடத்தக்கது.