டில்லி

கில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மூன்றாவதாக இருந்த டில்லி மீண்டும் 2 ஆம் இடத்துக்கு வந்துள்ளதால் தலைநகர மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.   உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது.   இந்தியாவில் 4,26,910 பேர் பாதிக்கப்பட்டு இதில்13,703 பேர் உயிர் இழந்துள்ளனர்.  தற்போது 1,75,904 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் அதிக அளவில் பாதிப்பு உள்ள மாநிலமாக உள்ளது.  நேற்று முன் தினம் வரை தமிழகம் இரண்டாம் இடத்திலும் டில்லி மூன்றாம் இடத்திலும் இருந்தன.  நேற்று டில்லியில் பாதிப்பு 3000 அதிகரித்து மொத்தம் 59,746 பேர் ஆகி இரண்டாம் இடத்துக்கு வந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் டில்லியில் 63 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணமடைந்தோர் எண்ணிக்கை 2175 ஆகி உள்ளது.  அதிகம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கையிலும் டில்லி இரண்டாம் இடத்தில் உள்ளது.  இது தலைநகர் டில்லி வாழ் மக்களிடையே கடும் பீதியைக் கிளப்பி உள்ளது.

தற்போது பாதிப்பு எண்ணிக்கையில்  தமிழக 59,377 பேருடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.  இதற்கு அடுத்தபடியாக 27,317 பேருடன் குஜராத் மாநிலம் மற்றும் 17,731 பேருடன் உத்தரப் பிரதேச மாநிலம் ஆகியவை உள்ளன.   குஜராத் மாநிலத்தில் 1664 பேர் மரணம் அடைந்து உயிர் இழந்தோர் எண்ணிக்கையில் இம்மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.