கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவிக் கொண்டிருப்பதைப் பார்த்தால், இந்த வைரஸ் மக்களிடையே எவ்வளவு விரைவாக தொற்றுகிறது என்பது தெளிவாகிறது. வைரஸ் தொற்று ஏற்பட்ட ஒருவரின் தும்மல்/இருமல்/சுவாசத்தின் போது காற்றில் கலக்கும் திரவத்துளிகள் (இதை Aerosol – காற்றில் பரவும் திரவத்துளிகள் என்று கூறுவார்கள்) வழியாக மக்களிடையே பரவுவதாலும், ஏரோசல் துகள்களில் கூட நீண்ட நேரம் உயிருடன் இருக்க முடியும் என்பதாலும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது அவசியம் என்பதை நாம் அறிவோம். அதே காரணங்களுக்காக, மளிகை அல்லது மருந்து கடை போன்ற பொது இடத்திற்குச் செல்லும்போது நாம் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்கிறோம், ஆனால் வீட்டுக்குள்?
வீட்டிக்குள் இந்தத் தொற்று எவ்வளவு விரைவாக பரவுகிறது என்பதைப் பற்றிய ஒரு புதிய ஆய்வில், SARS போன்ற நோய்களுடன் ஒப்பிடும்போது COVID-19 வீட்டுக்குள்ளே இரு மடங்கு வேகமாகவும், அதிகமாகவும் பரவுவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஒரு கொரோனா வைரஸ் நோயாளி நோய் ஏற்பட்டதற்கான அறிகுறிகளை காண்பிப்பதற்கு முன்பே அவரிடம் இருந்து ஏராளமான அளவில் கிருமிகள் பரவுகின்றன.
ஆய்வுகளும் முடிவுகளும்
சீனா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இந்த ஆய்வு முடிவுகள் இனி வரவிருக்கும் நேரத்தில் புதிய தொற்றுநோய்களின் தடுப்பு மற்றும் கட்டுபாட்டிற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று வலியுறுத்தினர். ஆய்வுக்காக, ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 350 நோயாளிகளின் தரவுகளையும், சீனாவின் குவாங்சோ நகரில் சுமார் 2000 நெருங்கிய தொடர்புடையவர்களின் விவரங்களையும் பயன்படுத்தி ஆய்வு செய்தனர். பின்னர் இந்த ஆய்வை மதிப்பாய்வு செய்து முடிவுகளை கணக்கிட்டதில், வைரஸின் “இரண்டாம் நிலை தாக்குதல் வீதத்தை” அவர்களால் மதிப்பிட முடிந்தது. இரண்டாம் நிலை என்பது முதலில் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து தொற்று நோய் இரண்டாவதாக வேறொருவருக்கு பரவும் நிலை ஆகும்.
சராசரியாக, ஒரு பாதிக்கப்பட்டவரிடம் இருந்து அவருடன் வசிக்காத ஒருவருக்கு நோய் பரவும் வாய்ப்பு வெறும் 2.4 சதவீதம் மட்டுமே இருந்தது. ஆனால், உடன் வசிக்கும் ஒருவருக்கு நோய் பரவும் சாத்தியம் எனபது 17.1 சதவீதம் அதிகரித்திருந்தது. வயதை பொருத்து குறிப்பாக உடன் வசிப்பவர்களில் தொற்று நோய் ஏற்படும் வாய்ப்பு 60 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே மிகவும் அதிகமாகவும், 20 வயதிற்குட்பட்டவர்களிடையே மிகக் குறைவாகவும் இருந்தது.
பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஒட்டுமொத்த வாய்ப்பு SARS ஐ விட இரண்டு மடங்கு அதிகமாகவும், MERS ஐ விட மூன்று மடங்கு அதிகமாகவும் இருந்தது.
முடிவாக, நோய் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்னரே எளிதில் பரவக்கூடியது என்று என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. வீட்டிற்குள் நோய்க்கான அபாயம் மூன்று மடங்கு வரை அதிகமிருப்பதால், ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, வீட்டுக்குள் தனிமைப்படுத்தப்படுவது தொற்று நோய்கான அபாயத்தை 20-50 சதவீதம் வரை குறைக்கும். எனவே, வீட்டில் இரு! விலகி இரு!
தமிழில்: லயா