சென்னை:
கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் மக்கள் கடந்த மார்ச் மாதம் வீடுகளிலேயே முடங்கி கிடப்பதால், பலர் மனஅழுத்ததுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், மன அழுத்தம், மனநல ஆலோசனை குறித்து 104 உதவி எண்ணை அழையுங்கள் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் பொதுவான அனைவரும் அறிந்திரும் உதவி எண்கள் 100, 101, 108 . இவைகள் போலீஸ், தீ விபத்து, மருத்துவ உதவி போன்வற்றுக்காக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.
இத்துடன் 104 உதவி எண்ணும் ஏற்கவே இணைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் மனநலப் பிரச்சினைகளுக்கு எளிதாக தீர்வு காணலாம்.
அரசின் உதவியோடு செயல்பட்டு வரும் இந்த சேவை மையத்தை தொடர்புகொண்டு, தமிழ்நாட்டு மக்கள் எந்த பகுதியிலிருந்தும், வாரத்தில் 7 நாட்களும், 24 மணி நேரமும் (24/7) சேவையை இலவசமாகப் பெறலாம்.
மனநல ஆலோசனை, மருத்துவ ஆலோசனை, அரசு மருத்துவ சேவைகள் என எந்த பிரச்சினை என்றால், இந்த எண்ணை தொடர்புகொண்டு, ஆலோசனை பெறலாம்.
கொரோனாவால் வீடுகளுக்குள்ளேயே முடங்கி , மனஅழுத்தத்தால் தத்தளிப்போர் 104 உதவி எண்ணை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கார் தெரிவித்துஉள்ளார்.
மனநல ஆலோசனை
சோர்வு, பயம், கோபம், தேர்வு பயம், மன அழுத்தம், மனச் சோர்வு, தற்கொலை எண்ணம், குடி மற்றும் புகைப் பழக்கத்துக்கு அடிமையானோருக்கான ஆலோசனை, தீய பழக்கத்தில் இருந்து தன் துணையைச் சரிசெய்வதற்கான ஆலோசனை, தாம்பத்ய உறவில் சிக்கல், துணையின் தவறான போக்கு, டென்ஷன், தம்பதியர்களின் உறவில் பிரச்னை, தூக்கமின்மை, குழந்தைகளின் நடவடிக்கைகளில் மாற்றம் போன்ற அனைத்து மனப் பிரச்னைகளுக்கும் மனநல ஆலோசகர்கள் ஆலோசனைகளை வழங்குவர்.
அதுபோல அரசு மருத்துவமனைகளில் ஏதேனும் சேவையில் பிரச்னையோ, குறையோ என்றால்கூட, 104க்கு அழைக் கலாம். அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை, மருத்துவ வசதிகள் இல்லை, மருந்துகள் இல்லை போன்ற அனைத்துப் புகார்களுக்கும் இந்த 104ஐ தொடர்பு கொள்ளலாம். பிரச்னைகளைப் பதிவு செய்ததும், உடனடியாக அந்தப் பிரச்னைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த இலவச அழைப்பு உதவித் திட்டத்தினால் பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. மருத்துவத் தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதால், மக்களுக்கு உடல் மற்றும் மனநலப் பிரச்னைகளிலிருந்து தீர்வுகள் கிடைக்கின்றன. தேவைப்படுவோர் 104 உதவி எண்ணின் சேவையை பெற்று பயன்பெறலாம்.