சென்னை:

சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் கடந்த 16 மணி நேரத்தில் 26 பேர் பலியாகி உள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.  அதாவது நேற்று (19ந்தேதி) மாலை 6 மணி முதல்  இன்று (20ந்தேதி) காலை 10 மணி வரைக்குள் மருத்துவமனைகளில்சிகிச்சை பெற்று வந்த 26 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.


தமிழகத்தில், நேற்று ஒரே நாளில் புதிதாக 2115 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து மொத்தம், 54,449 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் நேற்று  ஒரே நாளில் 1322 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது, வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38327 ஆக அதிகரித்துள்ளது. அதில் 16,699 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 21,098 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார். மேலும் சென்னையில் இதுவரை  529 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகளில் மேலும் 26 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 9 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 5 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 2 பேரும்  உயிரிழந்துள்ளனர்.

மேலும், கேகேநகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் 2 பேரும் ரயில்வே மருத்துவமனையில் 3 பேரும் அப்போலோவில் ஒருவரும் கொரோனாவுக்கு சிகிச்ச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.