சென்னை
முழு ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் சென்னையில் நேற்று வழக்கம் போல் விமான போக்குவரத்து இயங்கி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. குறிப்பாகச் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. எனவே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் நேற்று முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இம்முறை ஊரடங்கு விதிகள் கடுமையாகப் பின்பற்றப் படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நேற்று சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமானச் சேவை வழக்கம் போல் நடந்துள்ளது. நேற்று சென்னையிலிருந்து டில்லி, கொல்கத்தா, வாரணாசி, அந்தமான், ஐதராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம் , மதுரிஅ கோவை, தூத்துக்குடி, சேலம் உள்ளிட்ட இடங்களுக்கு 32 விமானங்கள் இயங்கின. சுமார் 3750 பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர்.
இதைப் போல் மேலே குறிப்பிடப்பட்ட நகரங்களில் இருந்து சென்னைக்கு 32 விமானங்கள் வந்துள்ளன. இந்த விமானங்களில் பயணம் செய்ய சுமார் 1600 பேர் முன்பதிவு செய்துள்ளனர். மொத்தத்தில் சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று ஊரடங்கு சமயத்தில் 64 விமானங்களில் பயணம் செய்ய சுமார் 5350 பேர் முன் பதிவு செய்திருந்தனர்.
ஊரடங்கு காரணமாக இரு சக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்ட நிலையில் விமானப் பயணத்துக்கு தடை இல்லையா எனப் பொதுமக்கள் கேட்டுள்ளனர்.