சீன தயாரிப்புகளில் மிகச்சிறந்த தயாரிப்பான ஒன்பிளஸ் மொபைல் போன்களுக்கு இந்தியர்கள் உள்பட உலக நாடுகளில் பெரும் வரவேற்பு உண்டு. வாங்குனா இப்படியொரு போனை வாங்கணும்; இல்லனா மொபைலே யூஸ் பண்ணகூடாது என்று கெத்து காட்டுபவர்களும் உண்டு.
ஆனால், சமீபத்தில், லடாக் கல்வான் பள்ளத்தாக்கு எல்லைப் பகுதியில் இந்திய வீரர்களை சீன வீரர்கள் தாக்கி கொல்லப்பட்ட நிகழ்வுகளைத் தொடர்ந்து, சீனாவுக்கு எதிரான மனநிலை இந்தியர்களிடையே அதிகரித்து இருப்பதாக கூறப்பட்டது.
இதையடுத்து, சீன பொருட்களை வாங்காதீர்கள், சீனா செயலிகளை மொபைல் போனில் உபயோகப்படுத்தாதீர்கள் என பாஜகவினர் மட்டுமின்றி, பெரும்பாலோனோர், சமூக வலைதளங்களில் பதிவிட்டு, வைரலாக்கி வந்தனர். #BoycottChineseSmartphones? என்ற ஹேஸ்டேக்கும் டிரெண்டிங்கானது.
இந்த பரபரப்புக்கு இடையே நேற்று சீனத் தயாரிப்பான ஒன்பிளஸ் 8 & ஒன்பிளஸ் 8 ப்ரோ மொபைல் போன்கள் பல்வேறு சலுகைகளோடு அமேஷான் இணையதளத்தில் விற்பனை தொடங்கியது.
ஆனால், விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே, முழுவதும் விற்பனையாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியா முழுவதும் சீன ஸ்மார்ட்போன்கள் மற்றும் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற அழைப்புக்கு மத்தியில், ஒன்பிளஸ் 8 ப்ரோ சில நிமிடங்களில் விற்கப்பட்டது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
கொரோனா முடக்கம் காரணமாக, தற்போது, மாணாக்கர்களுக்கு இணைய வழிக்கல்வி தொடங்கப் பட்டு வருவதால், ஸ்மார்ட் போன்களின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால், தேவையான அளவு இந்திய தயாரிப்பு ‘மேட் இன் இந்தியா’ ஸ்மார்ட்போன்கள் கிடைப்பதில் சிக்கல்கள் எழுந்துள்ளன.
சீன ஸ்மார்ட்போன்கள் மற்றும் சீன தயாரிப்புகளுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்த போதிலும், சீனத்தயாரிப்பான ஒன்பிளஸ் விற்பனை, எப்போதும் போல சாதனை படைத்துள்ளது.
சீன ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்றான ஒன்பிளஸ் நிறுவன போன்கள், தற்போது 70 சதவீத சந்தை பங்கைக் கொண்டு இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது.
இருந்தாலும் இந்திய மொபைல் தயாரிப்பு நிறுவனங்களும், தற்போதைய சீனாவுக்குஎதிரான மக்களின் மனநிலையை புரிந்துகொண்டு, வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இந்திய ஸ்மார்ட்போன் பிராண்ட் மைக்ரோமேக்ஸ் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது, மேலும் ரூ .10,000 க்கு கீழ் மூன்று புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுடன் மீண்டும் வருவதை உறுதிப்படுத்தியுள்ளது.
சீனப் பொருட்களை வாங்காதீர்கள் என்று ஒருபுறம் கூவிக்கொண்டே மற்றொருபுறம் சில நிமிடங்களில் ‘ஒன்பிளஸ்’ போன் இந்திய சந்தையில் அமோகமாக விற்பனையாகி உள்ளது… ஊருக்குத்தான் உபதேசம் என்பதை அம்பலப்படுத்தி உள்ளது.