சென்னை
சென்னையில் வீடு வீடாக வெப்பநிலை சோதனை செய்யும் ஊழியர்களிடம் 1000 ஆக்சி மீட்டர்கள் அளிக்கப்பட்டு ஆக்சிஜன் அளவு சோதிக்கப்பட உள்ளது.
கொரோனா பரவுதல் சென்னையில் அதிகரித்துள்ளதால் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் இன்று முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் சென்னை மாநகராட்சி கொரோனா தொற்றைக் கண்டறிய வீடு வீடாக ஊழியர் மூலம் அனைத்து மக்களையும் உடல் வெப்பநிலை சோதனை செய்து வருகிறது.
ஆனால் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருந்தாலும் உடல் வெப்பநிலையில் மாறுதல் இருப்பதில்லை. இவ்வாறு அறிகுறிகள் அற்று இருப்போரில் சிலருக்கு ஆக்சிஜன் அளவு மிகக் குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு இருப்போர் விரைவில் அபாய நிலையை அடையக் கூடும். எனவே இவர்களது ஆக்சிஜன் அளவையும் வீடு வீடாகச் சோதனை செய்யும் ஊழியர்கள் பரிசோதனை செய்ய உள்ளனர்
இவர்களிடம் இதற்காக 1000 பல்ஸ் ஆக்சி மீட்டர் கருவிகள் அளிக்கப்பட்டுள்ளன. இவைகளை வீடு தோறும் வைத்திருக்க வேண்டும் என ஏற்கனவே சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி இருந்தது. ஆனால் இந்த கருவியின் விலை ரூ.1500க்கும் அதிகம் என்பதால் பலரால் இதை வாங்க முடிவதில்லை. எனவே மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக இந்த பரிசோதனை செய்ய உள்ளனர்.
இந்த பணிக்காக சென்னை மாநகராட்சி 4000 சுய உதவி தொண்டர்களை நியமிக்க உள்ளது இவர்கள் தொற்று உறுதியானவர்கள் வீட்டிலேயே இருப்பதை கண்காணிக்க உள்ளனர். அத்துடன் ஒவ்வொரு தொண்டரும் நோயாளிகள் மற்றும் அவர் குடும்பத்தினரை ஒரு வாட்ஸ்அப் குழுவில் இணைத்து அவர்கள் தேவைகளை உடனுக்குடன் அளிக்க உள்ளனர். இந்த குழுவில் சேர்க்கப்படுவோர் 14 நாட்களுக்குப் பிறகு தாமாகவே விலக்கப்படுவார்கள்.