மும்பை

சீனப் பொருட்கள் மற்றும் நிறுவனங்களை முழுமையாகத் தடை செய்தால் பிசிசிஐ அதை ஏற்றுக் கொள்ளத் தயார் என பிசிசிஐ பொருளாளர் அருண் துமல் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியா மற்றும் சீனா இடையேயான மோதலில் 20 பேர் கொல்லப்பட்டதை அடுத்து சீனப் பொருட்கள் மற்றும் சேவைகளைப் புறக்கணிக்க வேண்டும் எனப் பலரும் கூறி வருகின்றனர்.  அகில இந்திய வர்த்தகர் சங்கம் 500க்கும் மேற்பட்ட சீனப் பொருட்களைப் பட்டியலிட்டு அவற்றைப் புறக்கணிக்க மக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.  மேலும் சுமார் 50 சீன செயலிகளைத் தடை செய்ய இந்திய அரசுக்குக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

பிசிசிஐ நடத்த உள்ள ஐபிஎல் போட்டிகளுக்குச் சீன நிறுவனமான விவோ ஸ்பன்சர் செய்கிறது.  இந்நிறுவனம் பிசிசிஐக்கு வருடத்துக்கு ரூ.400 கோடி வழங்கி வருகிறது.  இந்நிலையில் பிசிசிஐ பொருளாளர் அருண் துமல், “நாம் உணர்ச்சி வசப்படும் போது நமது அறிவு பின்னோக்கி சென்று விடும். சீன நிறுவனத்திடம் இருந்து நாம் ஆதாயம் பெறுவது மற்றும் சீன நிறுவனம் நம்மிடம் இருந்து ஆதாயம் பெறுவது இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.

சீன நிறுவன பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதிக்கும் போது இந்திய வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை பெறுகின்றனர்.  அதில் ஒரு பகுதியை பிசிசிஐக்கு அளிக்கின்றனர்.  அதில் இருந்து நாங்கள் இந்திய அரசுக்கு 42% வரி அளிக்கிறோம்.  எனவே இது இந்தியாவுக்கு ஆதாயம் அளிக்கிறதே தவிர சீனாவுக்கு இல்லை.

சீன நிறுவனம் ஐபிஎஸ் ஸ்பான்சரில் இருந்து விலகினால் இந்த  பணத்தை அவர்கள் சீனாவுக்கு எடுத்துச் செல்வார்கள்.   ஐபிஎல் ஸ்பான்சர் மூலம் அந்தப் பணம் இந்தியாவிலேயே இருக்கும் என்பதால் நாம் அதற்கு மகிழ்ச்சி அடைய வேண்டும்.   மேலும் வரி அளிப்பதன் மூலம் இந்திய அரசும் ஆதாயம் அடைகிறது.  நாங்கள் கிரிக்கெட் தொடர்பான எவ்வித பணியையும் சீன நிறுவனத்துக்கு வழங்குவதில்லை.

இந்திய அரசு சீனப் பொருட்கள் மற்றும் சீன நிறுவனங்களை முழுவதுமாக தடை செய்யப்படுவதாக அறிவித்தால் பிசிசிஐ அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளும்.  ஆனால் அது போன்ற தடை உத்தரவு ஏதும் இல்லாமல் இந்தியப் பணம் இந்திய கிரிக்கெட் மேம்பாட்டுக்குப் பயன்படும் என்னும் போது இதில் ஏதும் பிரச்சினை உள்ளதாக எனக்குத் தெரியவில்லை.” எனக்  கூறி உள்ளார்.