புதுடெல்லி: இந்தியா – சீனா இடையே தற்போது லடாக் பகுதியில் ஏற்பட்டுள்ள மோதலையடுத்து, சீன இறக்குமதி ஆர்டர்களை, இந்திய இறக்குமதியாளர்கள் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, கொல்கத்தாவைச் சேர்ந்த இறக்குமதியாளர்கள் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; சீனாவிலிருந்து பொம்மைகள் முதல், விளக்குகள், தொழிற்சாலை பொருட்கள் வரை இறக்குமதி ஆகின்றன. கொரோனா பாதிப்பு காரணமாக, ஏற்கனவே 30% முதல் 40% அளவிற்கு இறக்குமதி குறைந்துவிட்டது.
தற்போது, கல்வான் பள்ளத்தாக்கு பிரச்சினைக்குப் பிறகு, இறக்குமதியாளர்கள் புதிய ஆர்டர்களை நிறுத்தி வைத்துள்ளனர். ஏற்றுமதியாளர்களும் தங்கள் கவலையை தெரிவித்துள்ளனர்.
பொறியியல் பொருட்கள் ஏற்றுமதியைப் பொறுத்தவரை, தற்காலிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொதுவாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள், வணிகத்துடன் அரசியலை இணைத்துப் பார்க்க மாட்டார்கள். இப்போதைய பிரச்சினைகளால், ஏற்றுமதியாளர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்கலாம். ஆனால், பணம் குறித்த சிக்கல்கள் இல்லாதபட்சத்தில், ஏற்றுமதிகள் இயல்பாகவே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.