மணிப்பூர்
மணிப்பூரில் பாஜக பெரும்பான்மை இழந்ததையொட்டி காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த மணிப்பூர் மாநில சட்டப்பேரவை தேர்தலில் எந்த கடிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 60 இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்கள் கிடைத்தன. பாஜகவுக்கு 21 இடங்கள் கிடைத்தன. ஆனால் பாஜக பல தந்திரங்களைச் செய்து ஆட்சியைப் பிடித்தது.
ஆனால் தற்போது பாஜகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் 3 பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அக்கட்சியில் இருந்து விலகி உள்ளனர். அது மட்டுமின்றி பாஜகவுக்கு ஆதரவு அளித்து வந்த தேசிய மக்கள் கட்சி உறுப்பினர்கள் நால்வர் மற்றும் சுயேச்சை ஒருவர், திருணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் ஆகியோரும் ஆதரவை விலக்கிக் கொண்டனர்
இதனால் பாஜக சட்டப்பேரவையில் பெரும்பான்மை இழந்தது. மணிப்பூர் முதல்வரான பாஜகவின் பைரோன் சிங் ஆளுநரைச் சந்தித்து ராஜினாமா அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதையொட்டி மணிப்பூர் மாநில காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளது.
மணிப்பூர் மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான ஒக்ராம் இபோபி சிங் ஆளுநருக்குக் காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற முன்னேற்ற முன்னணியை அரசு அமைத்து பேரவையில் பலத்தை நிரூபிக்க அழைக்குமாறு கடிதம் எழுதி உள்ளார்
தற்போது 11 பேர் பதவி இழந்துள்ள நிலையில் மொத்தம் உள்ள 49 உறுப்பினர்களில் 26 பேர் இந்த முன்னணிக்கு ஆதரவு அளித்துள்ளனர்.