டெல்லி :
கிழக்கு லடாக்கில் சீனாவுடன் நடந்து வரும் பிரச்சனையை சமாளிக்க, ரஷ்யாவிலிருந்து 21 மிக் -29 (MiG-29) மற்றும் 12 சு -30 எம்.கே.ஐ (Su-30MKI) உள்ளிட்ட 33 புதிய போர் விமானங்களை வாங்குவதற்கான திட்டத்தை அரசுக்கு இந்திய விமானப்படை பரிந்துரைத்துள்ளது.
“நீண்ட நாட்களாக பரிசீலனையில் உள்ள இந்த திட்டத்தை விமானப்படை தற்போது விரைந்து செயல்படுத்த கோரிக்கைவைத்துள்ளது. அடுத்தவாரம் நடைபெற உள்ள பாதுகாப்பு அமைச்சக உயர்நிலை குழு கூட்டத்தில் ரூ. 6000 கோடிக்கு பல்வேறு திட்டங்கள் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகின்றன”, என்று அரசு வட்டாரங்கள் கூறியதாக ANI செய்திவெளியிட்டுள்ளது.
பல்வேறு விபத்துக்களில் சேதமடைந்த விமானங்களின் எண்ணிக்கையை ஈடுசெய்ய 12 சு -30 எம்.கே.ஐ.களை (Su-30MKI) வாங்க விமானப்படையால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தியா 10 முதல் 15 வருட காலப்பகுதியில் 272 சு -30 (Su-30) போர் விமானங்களுக்கான ஆர்டர்களை வெவ்வேறு தொகுதிகளில் வழங்கியிருந்தது, அதிக எடை கொண்ட விமான பிரிவில் இதுவரை வாங்கிய விமானங்களின் எண்ணிக்கை தேவைக்கு போதுமானதாக இருக்கும் என்று மூத்த அதிகாரிகள் கருதுகின்றனர்.
தற்போது ரஷ்யாவிலிருந்து வாங்க திட்டமிட்டுள்ள 21 மிக்-29 (MiG-29) கள், விமானப்படைக்கு தேவையான புதிய போர் விமானங்களின் தேவையை பூர்த்தி செய்ய உதவும் என்று கூறப்படுகிறது.
இந்திய விமானப்படையில் மிக் -29 (MiG-29) விமானங்களை கொண்ட மூன்று படைப்பிரிவுகள் உள்ளன, அவை நீடித்த பயன்பாட்டிற்காக மேம்படுத்தப்பட்டு வருகின்றன, மேலும் அவை வான் பாதுகாப்பில் நம்பகமானதாக கருதப்படுகிறது.
10,000 க்கும் மேற்பட்ட சீன துருப்புகள் கிழக்கு லடாக்கில் உள்ள இந்திய எல்லையில் நிலைகொண்டுள்ளதால் இந்தியா சீன இடையே பதற்றம் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.