சென்னை:

சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால், அண்ணா பல்கலைக்கழகத்தை, கொரோனா வார்டாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் கொரோனா  தொற்று நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகிறது. சென்னையில் மட்டும்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35,556 ஆக அதிகரித்துள்ளது.  இதன் காரணமாக, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வார்டுகள் நிரம்பி உள்ளதாக கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி, மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் வசிக்கும் குடும்பத்தில் ஒருவருக்கு தொற்று உறுதியானால், மற்றவர்கள் தனித்திருக்க வாய்ப்பு இல்லாத நிலையில், அவர்களை பள்ளிகள், சமூதாயக் கூடங்கள் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களுக்கு அழைத்துச்சென்று தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக கட்டிடங்களையும் கொரோனா வார்டாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து,  அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்னை மாநகராட்சி சார்பில் கடிதம் எழுதப்பட்டு இருப்பதாகவும், அதில்,  விடுதியில் மாணவர்கள் தங்கி இருந்தால் காலி செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.