டெல்லி: இந்தியா-சீனா எல்லை மோதல் குறித்து இருநாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நேற்று முன்தினம் இரவு லடாக் எல்லையில் இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் இடையே கடும் மோதல் மூண்டது. இந்த மோதலில் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படவில்லை. மாறாக கற்கள், கட்டைகள் மற்றும் ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டது.
அதில் இரு தரப்புக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்திய தரப்பில் தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பில் பலியானோர் மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 45 என்று தகவல்கள் கூறுகின்றன.
இரு நாடுகளின் படைகளும் திரும்பிச் சென்று விட்டன. தாக்குதல் சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனாலும், தாக்குதலால் இருநாட்டு எல்லைகளிலும் பெரும் பதற்றம் நிலவியது.
இந்நிலையில், லடாக் எல்லையில் நடந்த மோதல் தொடர்பாக இந்தியா, சீனா வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்திய வீரர்கள் உயிரிழப்புக்கு காரணமான சீன ராணுவ அதிகாரிகள் மீது அந்நாடு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்போது அமைச்சர் ஜெய் சங்கர் வலியுறுத்தினார்.