டெல்லி:
கொரோனா தொற்று பரவி வரும் இந்த காலக்கட்டத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர் களுக்கு ஊதியம் தர மறுப்பது கிரிமினல் குற்றம் என்று உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும், செவிலியர்களும், அதே நோய் தாக்குதலுக்கு ஆளாகி பலியாகி வரும் சோகமும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு சரியான முறையில் ஊதியம் வழங்கப்பட வில்லை என்று உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ் கே கவுல் மற்றும் எம் ஆர் ஷா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது, மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள் வழங்குவது குறித்து நான்கு வாரங்களுக்குள் இணக்க அறிக்கை தாக்கல் செய்யுமாறு மையத்தை கேட்டுக்கொண்டதுடன், இணங்காதது தீவிரமாக பார்க்கப்படும் என்று எச்சரித்தது.
மேலும், கொரோனா காலத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஊதியம் தராவிடில் கிரிமினல் குற்றமாக கருதி தண்டனை தரப்படும் என்றும், நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனே வழங்க அறிவுறுத்துமாறு மத்திய அரசுக்கு ஆணையிட்டுள்ள நீதிமன்றம், டாக்டர்களுக்கு சம்பளம் வழங்குமாறு மாநிலங்களை அரசு வழிநடத்த வேண்டும் என்றும், இதுகுறித்து விரிவான அறிக்கை 4 வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.