பெங்களூரு
கர்நாடக முதல்வர் எடியூரப்பா கொரோனாவை ஒழிக்க மகா தன்வந்திரி யாகம் நடத்தி உள்ளார்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலக நாடுகளைக் கடுமையாக அச்சுறுத்தி வருகின்றது. உலக அளவில் 82.5 லட்சத்துக்கு மேல் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரஸ் இதுவரை சுமார் 4.4 லட்சம் பேரைப் பலி வாங்கி உள்ளது. உலக அளவில் பாதிப்பு வரிசையில் 4 ஆம் இடத்தில் இந்தியா உள்ளது.
இந்தியாவில் இதுவரை 3.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 11,900க்கும் மேல் உயிர் இழந்துள்ளனர். இதைத் தடுக்க அனைத்து மாநில அரசுகளும் கடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. கர்நாடக மாநிலத்தில் 7500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இதில் 94 பேர் உயிர் இழந்துள்ளனர்.
நேற்று காலை கர்நாடக முதல்வர் எடியூரப்பா பெங்களூருவில் உள்ள சங்கர மடத்தில் கொரோனாவை ஒழிக்க மகா தன்வந்திரி யாகம் நடத்தி உள்ளார். இதில் சிருங்கேரியைச் சேர்ந்த புரோகிதர்கள் மந்திரங்கள் ஓதி உள்ளனர். முதல்வர் எடியூரப்பா பூக்களைத் தூவி தீபாராதனை காட்டி கொரோனா ஒழிய வேண்டும் என வேண்டிக் கொண்டுள்ளார்.
யாகத்தை நடத்திய புரோகிதர்கள், “உலக நன்மைக்காகவும் கொரோனா ஒழிந்து உலகம் காப்பாற்றப்படவும் இந்த மகா தன்வந்திரி யாகம் நடத்தப்பட்டது. இதனால் கொரோனா ஒழிந்து கர்நாடக மாநிலத்துக்கும் உலகுக்கும் நன்மை ஏற்படும். முதல்வர் எடியூரப்பாவுக்கு இவற்றில் நம்பிக்கை உள்ளதால் அவர் பங்கேற்றார்” எனத் தெரிவித்துள்ளனர்.