புதுச்சேரி:
புதுச்சேரியிலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருவதால், மாநிலம் முழுவதும் 15 நாட்கள் முழு ஊரடங்கைநடைமுறைப்படுத்த வேண்டும் என புதுச்சேரி சமூக, ஜனநாயக இயக்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
புதுச்சேரி மாநில தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், மீனவர் விடுதலை வேங்கைகள், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு உள்பட 12 இயக்கங்கள் இணைந்து, மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன-
சென்னை மாநகரமே இன்று மிகப் பெரும் அபாயக் கட்டத்தில் இருப்பதைப் புதுச்சேரி அரசு உணர வேண்டும். அதேபோல், மக்கள் தொகை அடர்த்தியாக உள்ள சிறிய நகரமான புதுச்சேரி நோய்த் தொற்றின் மிகவும் அபாயகரமானக் கட்டத்திற்குச் சென்று கொண்டிருப்பதை அரசு கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
அதேபோல் நோய்த் தொற்றைப் பரிசோதிக்க மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் போதுமான அளவில் தயார் நிலையில் வைக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளைப் பயன்படுத்த ஏதுவாக அவசர உத்தரவுப் பிறப்பிக்க வேண்டும்.
இவை அனைத்தையும் எதிர்வரும் சில நாட்களில் போர்க்கால அடிப்படையில் செய்து முடித்துவிட்டு, புதுச்சேரியில் முதல்கட்டமாக 15 நாட்களுக்கு முழு ஊரடங்கை மிக கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் வெகுவாக குறைத்து மக்களைப் பாதுகாக்க முடியும்.
எனவே, புதுச்சேரி அரசும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக் கும் விரைவாக நிவாரணம் வழங்கி, அவர்களை வீட்டுக்குள்ளேயே இருக்கச் செய்வதன் மூலம் புதுச்சேரியை கொரோனோ தொற்றிலிருந்து முழுமையாக பாதுகாக்க முடியும் என சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் மத்திய – மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்’.