வாவ்… இப்படியும் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர்…
புதுக்கோட்டை மாவட்டம் வடக்காடைச் சேர்ந்த 52 வயது தமிழரசன் ஏனாதிக்கரம்பை என்னும் கிராம அரசுப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்த கொரோனா ஊரடங்கினால் பள்ளிகள் திறக்காததால், மாணவர்கள் தங்களது வழக்கமான வகுப்புகளைத் தொடரமுடியாமல் போனதை உணர்ந்து, தினமும் 18 கிமீ பயணித்து ஒன்பதாம் வகுப்பு மாணவ-மாணவியருக்கு அவர்களது வீட்டிற்கே சென்று 10-ம் வகுப்பு பாடங்களை நடத்தி வருகிறார்.
“தனியார் ஸ்கூல் அவங்க மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தொடர்து வகுப்புகளை நடத்திட்டு வராங்க. ஆனா இந்த மாணவர்களிடம் அந்தளவு வசதிகள் ஏதுமில்ல. பசங்க விவசாய பணிகளிலும், பொம்பள பிள்ளைங்க தென்னை ஓலை பின்னுவதிலும் பெற்றோருக்கு உதவிட்டு இருக்குறாங்க. இந்த நிலையில் படிப்பை பத்திலாம் நினைக்கக்கூட முடியாது இந்த மாணவர்களால். அதனால தான் நானே நேரடியாக களத்தில் இறங்கிட்டேன்” என்று நிலைமையை விளக்குகிறார் தமிழரசன்.
இவர் முதலில் பெற்றோர்களை அணுகி மாணவர்கள் படிக்க வேண்டியதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்தி அவர்களின் அனுமதியுடன் தினமும் காலை 9 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை தகுந்த சமூக இடைவெளியுடன் பாடம் நடத்தி வருகிறார்.
மேலும் இவர் கூறுகையில் “மொத்தமுள்ள 31 மாணவர்களில், 28 பேர் வரை வரவெச்சு அவங்கள மூனு குரூப்பா பிரிச்சு சரியான இடைவெளில உட்கார வெச்சு இவர்களில் ஒரு மாணவனோட வீட்லயே கிளாஸ் எடுக்குறேன். இவங்களுக்கு தேவையான மாஸ்க் மற்றும் பேனா பென்சில் மாதிரியானவைகளை நானே வாங்கி குடுத்துட்டேன். போன வருச மாணவர்கள்கிட்டருந்து பழைய புத்தகங்களை வாங்கி இவங்களுக்கு படிக்க கொடுத்திருக்கேன்” என்கிறார்.
இம்மாணவர்களின் பெற்றோர், “சார் படிப்போட அவசியத்தை சொன்னதும், எங்களுக்கு உதவியா இருக்கிறதைவிட படிப்பு தான் முக்கியம்னு தெரிஞ்சுட்டு, உடனே அனுப்பி வெச்சுட்டோம்” என்கின்றனர்.
மாவட்ட கல்வி அதிகாரி, “தமிழரசன் சாரை எனக்கு ரொம்ப நாளா தெரியும். ரொம்ப அர்ப்பணிப்பா வேலை செய்றவர். அவருக்கு ஏதாவது தேவைன்னா உடனே பண்றதுக்கு தயாரா இருக்கோம்” என்று பாராட்டுகிறார்.
– லெட்சுமி பிரியா