சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில் வரலாறு !

தமிழ் நாட்டில், பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூரில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறுவாச்சூர் எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு அம்மன் கோயிலாகும். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள தொட்டியம் எனும் ஊரிலும் இப்பெயரிலான ஒரு கோவில் உள்ளது.தன் கணவனை ஆராயாமல் கொன்ற பாண்டியனிடம் நீதிகேட்டு, கோபத்துடன் மதுரையை எரித்தாள் கண்ணகி. பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றபோது வழியில் இருந்த செல்லியம்மன் கோயிலில் அன்றிரவு தங்கத் தீர்மானித்தாள்.

அங்கு தங்கியிருந்தபோது, அன்றிரவு செல்லியம்மன் தன் கருவறையிலிருந்து வெளிப்பட்டு, கண்ணகியிடம் வந்து, “பெண்ணே நீ இங்கு தங்கக் கூடாது” என்றார். காரணம் கேட்ட கண்ணகியிடம், தான் ஒரு மந்திரவாதியின் பிடியில் சிக்கி இருப்பதாகவும், தனது பக்தியால் தன்னிடம் பல வரங்களைப் பெற்ற அவன், ஒரு கட்டத்தில் மந்திரங்கள் மூலம் தன்னையே அவனுக்கு அடிமையாக்கி விட்டதாகக் கூறினார். மேலும் தனது அழிவுச் செயல்களுக்கு அவன் தன்னைப் பயன்படுத்தத் துடிப்பதாகவும். இந்த நிலையில் நீ இங்கு இருப்பதைப் பார்த்தால் அது உனக்கு ஆபத்து என்றார்.

செல்லியம்மனின் நிலையைக் கண்டு கண்ணகி மனம் வருந்தினாள். சற்று நேரத்தில் கோயிலுக்கு வந்த மந்திரவாதி, செல்லியம்மனை வெளியே வருமாறு அழைத்தான். திடீரென அவன் எதிரில் வாளோடு வந்த கண்ணகி, அவன் கழுத்தைத் துண்டித்தாள். வந்தது கண்ணகியல்ல, அவள் உருவத்தில் குடியேறிய காளியம்மன்தான் என்பதை உணர்ந்த மந்திரவாதி அவளிடம் இறுதியாக ஒரு வரம் வேண்டினான். அதன்படி இந்த ஆலயத்தில் தனக்கு ஒரு சமாதி அமைக்கப்பட வேண்டும் என்றும். பக்தர்கள் எல்லாம் அதன்மீது கால் வைத்துவிட்டு அம்மனை தரிசிக்க வர வேண்டும் என்றும். அதுவே தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் என்றான்.

கண்ணகி உருவில் இருந்த காளியம்மனும் இதற்கு ஒத்துக்கொண்டாள். மனம் நெகிழ்ந்த செல்லியம்மன், கண்ணகியின் உதவியைப் போற்றும் வண்ணம், “இனி இந்த சிறுவாச்சூர் உனக்கானது. மதுரகாளியம்மனாக நீயே இங்கு எழுந்தருள்வாயாக. பில்லி சூனியம், காற்று, கருப்பு போன்ற தீயசக்திகள் எதற்கும் இங்கு இனி இடம் கிடையாது. சூனியங்கள் இங்கு நடைபெறாது. நான் காட்டுக்கு நடுவே அமைந்துள்ள பெரியசாமிக் குன்றுக்குச் செல்கிறேன். நீ எப்போது வேண்டுமானாலும் என்னை வந்து சந்திக்கலாம்’’ என்று கூறி மறைந்தாள்.

கண்ணகியும் இதற்கு ஒத்துக்கொண்டாள் எனினும் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே தான் சிறுவாச்சூரில் இருப்பதாக வாக்களித்தாள். அதனால்தான் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் இங்கு பூசை நடக்கிறது. மேலும் பூசையின்போது மதுரகாளியம்மனுக்குத் தீபாராதனை காட்டுவதற்கு முன்பாக பூசாரி அதை செல்லியம்மன் குடியிருக்கும் பெரியசாமிக் குன்றின் திசையை நோக்கிக் காட்டிவிட்டு பிறகே மதுரகாளியம்மனின் திருவுருவத்துக்குக் காட்டுகிறார்.வாரத்தில் திங்கள், வெள்ளி ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே இக்கோயில் திறந்திருக்கும்; மற்ற நாட்களில் அம்மன் அருகிலிருக்கும் மலையில் வாசம் செய்வதாக ஒரு நம்பிக்கை.

மாவிளக்கு ஏற்றி வழிபடுவது இங்கு முக்கிய நேர்த்திக் கடனாகக் கருதப்படுகின்றது. இந்த மாவிளக்கிற்கான மாவைப் பக்தர்கள் கடைகளில் வாங்குவதோ, வீட்டில் தயாரித்துக் கொண்டு வருவதோ இல்லை. அவரவர் கொண்டுவரும் அரிசியை இங்குத் தண்ணீரில் ஊறவைத்து, அதற்கென்றே வைக்கப்பட்டுள்ள உரல்களில் இடித்து மாவாக்குகிறார்கள். மாவிடிக்க முடியாத நிலையிலுள்ளவர்களுக்கு உதவ ஆட்களும் இருக்கின்றனர்.

இங்கு மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தங்கத் தேர் உள்ளது.