கடலூரில் ஆயுதப்படை பெண் காவலர் பிரவீணா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சமீபத்தில் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்டதையும் யாரும் மறந்திருக்க முடியாது. சமீப காலத்தில் இது போல பெண் காவலர்கள் தற்கொலை செய்துகொள்வது அவ்வப்போது நடந்து வருகிறது.
ஏன் இப்படி நடக்கிறது? இதைத் தடுப்பது எப்படி?
ஓய்வு பெற்ற பெற்ற டிஜிபி திலகவதி ஐ.பி. எஸ். அவர்களை தொடர்புகொண்டு கேட்டோம். அவர், கூறியதாவது:
“பொதுவாகவே நமது சமுதாயத்தில் பெண்கள், மென்மையான உணர்வுகளுடன் வளர்க்கப்படுகிறார்கள். மன உறுதிமிக்க காவல்துறை பணிக்கு திடீரென அவர்கள் சேரும் போது அந்தப் பணி நெருக்கடியாக இருக்கக்கூடும்.
பாலியல் பாகுபாடுகள் எல்லா மட்டத்திலும் உள்ளன. தவிர, காவல் துறையில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆண்கள் உள்ளனர். ஆனால், பெண்களின் எண்ணிக்கை 16 ஆயிரம் மட்டும்தான்.
இந்த விகிதாச்சாரத்தை மாற்ற வேண்டும். காவல்துறையில் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காவது பெண்கள் இருக்க வேண்டும்.
2002-03-ம் ஆண்டில் ‘பெண் காவலர் நலம் பேணுதல்’ என்ற துறை அமைக்கப்பட்டு அதற்கு தலைவராக நான் நியமிக்கப்பட்டேன். அப்போது ஒவ்வொரு மாவட்டமாக சென்று பெண் காவலர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டு அறிந்தேன். சில தீர்வுகளும் கிடைத்தன.
ஆனால் 2003-ம் ஆண்டுக்குப் பிறகு அந்தப் பொறுப்பில் யாரும் நியமிக்கப்படவில்லை. “காவலர் நலம் பேணுதல்” துறைக்கு போதிய அதிகாரங்கள் கிடையாது.
ஆகவே, “பெண் காவலர் நலம் பேணுதல் அதிகாரியாக ஒருவரை நியமித்து அவருக்குகீழ் காவலர்கள், சமூக ஆர்வலர்கள் கொண்ட ஒரு உளவுத் துறை இயங்க வேண்டும். பெண் காவலர்களிடம் சக அதிகாரிகள், மற்றும் உயரதிகாரிகள் எப்படி நடந்துகொள்கிறார்கள், பெண் காவலர்களின் பிரச்சினைகள் என்னென்ன என்பதை கண்டறிய இது உதவியாக இருக்கும்.
அதே போல பெண் காவலர்களுக்கு மன உறுதி, சமத்துவ உரிமை, சமத்துவ எண்ணத்தை வளர்த்துக்கொள்ளுதல் போன்ற பயிற்சிகளை அளிக்க வேண்டும். அப்போது தான் தற்கொலை போன்ற சம்பவங்கள் இருக்காது” – இவ்வாறு திலகவதி ஐ.பிஎஸ். தெரிவித்தார்..