சேலம்:
சேலம் மாவட்டத்தில் 7038 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.36 கோடியே 44 லட்சம் கடன் உதவியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.
சேலம் மாவட்டம், எடப்பாடியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மகளிரின் பொருளாதார மேம்பாட்டிற்காக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சிறப்புக் கடனுதவியாக 7,038 நபர்களுக்கு ரூ. 36 கோடியே 44 லட்சத்து 15 ஆயிரம் கடனுதவி வழங்கும் அடையாளமாக விழா மேடையில் 9 பயனாளிகளுக்கு வழங்கினார்.
எடப்பாடி பயணியர் மாளிகையில் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் 904 நபர்களுக்கு பயிர்க் கடன், 191 நபர்களுக்கு மத்திய காலக் கடன், 765 நபர்கள் அடங்கிய 53 சுய உதவிக் குழுக்களுக்கு சுய உதவிக் குழுக் கடன், 1,240 நபர்கள் அடங்கிய 62 சுய உதவிக் குழுக்களுக்கு கோவிட்-19 கடனுதவி என 3,100 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 74 லட்சத்து 22 ஆயிரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
ஊரக வளர்ச்சித் துறை (மகளிர் திட்டம்) மூலம் கோவிட்-19 சிறப்பு வங்கிக் கடனுதவியாக 466 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், வங்கிக் கடனுதவியாக 295 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், சமூக முதலீட்டு நிதியாக 184 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், ஆதார நிதியாக 284 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், தனி நபர் கடனாக 245 நபர்களுக்கென 1,474 பயனாளிகளுக்கு ரூ.21 கோடியே 7 லட்சத்து 93 ஆயிரம் வழங்கப்பட்டது.
ஊரக வளர்ச்சித் துறை (ஊரக புத்தாக்கத் திட்டம்) மூலம் 154 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு கொரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்பு, ஒரு ஊராட்சிக் கூட்டமைப்புக்கு தலா ரூபாய் 2 லட்சம் வீதமும், 154 கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்திற்கு கொரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்பு, ஒரு சங்கத்திற்கு தலா ரூபாய் 1 லட்சம் என 2,464 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 62 லட்சம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் ராமன், மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் என். சந்திரசேகரன், சட்டமன்ற உறுப்பினர் எஸ். செம்மலை, எஸ்.ராஜா, தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கித்தலைவர் ஆர்.இளங்கோவன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.திவாகர், ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் இயக்குநர் நா.அருள்ஜோதி அரசன், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் மிருணாளினி உட்பட கூட்டுறவுத் துறை அலுவலர்கள், மகளிர் திட்ட அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.