மக்களுக்குத் தளர்ச்சி…. பிராணிகளுக்கே அதிர்ச்சி….
தளர்வு அறிவிக்கப்பட்டதிலிருந்து அதிகமான ஆக்ஸிடென்ட் கேஸ்கள் வர ஆரம்பிச்சிருக்கு. இதில் பெரும்பாலும், இடுப்பு, தலை மற்றும் எலும்பு முறிவுகள் தான் அதிகம்” என்கிறார் அடிபட்டு வரும் பிராணிகளுக்கு சிகிச்சை தரும் கால்நடை மருத்துவர் டாக்டர் அழகேசன்.
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகச் சாலையில் வாகன நடமாட்டமோ மக்கள் நடமாட்டமோ இல்லாமல் இருந்ததால் வளர்ப்புப்பிராணிகள், குறிப்பாகத் தெரு நாய்கள் சாலைகள் எங்கும் சுதந்திரமாகச் சுற்றித்திரிந்துள்ளன. தெருநாய்கள் எப்போதும் சாலை நடுவிலேயே தூங்கிக்கிடந்துள்ளன. இப்போது திடீரென வாகனப் போக்குவரத்து அதிகமானதால் இது போன்ற விபத்துகளும் அதிகமாகி விட்டது.
“ஏப்ரல்ல 155 கேஸ் பாத்தோம். அதில 37 ஆக்ஸிடென்ட் கேஸ். மே மாதம் 156 கேஸ்ல, 50 கேஸ் ஆக்ஸிடென்ட். ஆனா அதுவே இந்த ஜூன் 8-ம் தேதிக்குள்ளயே வந்த 51 கேஸ்ல 14 ஆக்ஸிடென்ட் கேஸ்” என்று புள்ளி விவரங்களுடன் விவரிக்கிறார் டாக்டர் அழகேசன்.
“ரோடு ஃபிரீயா இருக்கிறதால டூவீலர்ல போறவங்க சாதாரணமாவே ஸ்பீடா தான் ஒட்டிட்டு போறாங்க. அப்போ ரோட்ல சுற்றித்திரியிற அல்லது படுத்துக்கிடக்கும் பிராணிகள் மேல் மோதிடறாங்க” என்கிறார் ப்ளூ க்ராஸ் அமைப்பாளர் சின்னி கிருஷ்ணா.
பிராணிகள் நல ஆர்வலர் சரவண கிருஷ்ணன், “இத்தனை நாட்களாக நிறுத்தி வெச்சிருந்த வாகனங்களை வெளியே எடுக்கும் போது ஜாக்கிரதையா செக் பண்ணி எடுங்க. வண்டி உள்ளே, சக்கரங்களுக்கு இடையே என்ன வேணாலும் இருக்கலாம். மேலும் வண்டியோட பிரேக், ஹார்ன் இதெல்லாம் சரியா வேலை செய்தானு பர்த்துக்கோங்க. தெருநாய்கள் மேல ஏத்திட்டதால நடக்கிற விபத்துகள் அதிகமாக வருது” என்று எச்சரிக்கிறார்.
– லட்சுமி பிரியா