கண்கலங்கியவருக்கு கைகொடுத்த, சர்க்கரை பாகு…
கொரோனா நம் அனைவரையும் வீட்டுக்குள்ளேயே முடக்கிப் போட்ட அதே நேரம் தான் பெரம்பலூர் அருகேயுள்ள சிலக்குடி கிராமத்தைச் சேர்ந்த ராம்ராஜுக்கு புது வித யோசனை உருவாகி அவரை தன்னிறைவு பெற்றவராக மாற்றியுள்ளது.
எல்லா விவசாயிகளைப் போல இவரும் தனது ஒரு ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டு அறுவடைக்கு காந்த்திருந்த நேரத்தில் இடியாக வந்து சேர்ந்தது இந்த கொரோனா ஊரடங்கு. அறுவடைக்கு ஆட்கள் கிடைக்காமல் மற்றும் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில் செய்வதறியாது தவித்து நின்ற போது பக்கத்து ஊரில் சர்க்கரைப்பாகு காய்ச்சும் இயந்திரம் விலைக்கு வருவதாகக் கேள்விப்பட்டார் ராம்ராஜ்.
கொஞ்சமும் யோசிக்காமல் உடனடியாக செயல்பட்டு அந்த மெஷினை வாங்கி வந்து தனது வீட்டில் நிறுவ ஏற்பாடு செய்தார்.
“திடீர்னு இப்டி ஒரு சூழல் வந்தப்போ கைல சுத்தமா பணம் ஏதுமில்ல. ரூ. 40,000/- ஏற்பாடு செய்யவேண்டியதா போச்சு. எங்க அண்ணன் கொஞ்சம் உதவினாரு. பிரண்ட்ஸ்கிட்ட கொஞ்சம்னு வாங்கி உடனே மிஷினை இறக்கிட்டேன். பொதுவாவே நாங்க விளைய வைக்கிற கரும்பை ஆலைக்கு விற்க கொண்டு போனா இடையில் புரோக்கர்கள் தான் எங்கள விட அதிகமாக சம்பாரிச்சிட்டு போயிடுவாங்க. அப்போவே யோசிப்பேன். இதை ஏன் நாம நேரடியாக பண்ணக்கூடாதுனு. இப்போ அதுக்கான நேரம் அதுவா அமைஞ்சு வந்திடிச்சி” என்று விவரிக்கிறார்.
இந்த யூனிட்டை நிறுவ மொத்தம் ஒரு வாரம் ஆகியிருக்கிறது. இவரது வீட்டில் மனைவி, மாமனார், மாமியார் என்று மொத்தம் ஏழு பேர் இருப்பதால் வேலை ஆட்கள் பிரச்சினையும் இல்லை. எனவே மெஷினை நிறுவிய கையோடு உற்பத்தியையும் துவக்கி விட்டார் ராம்ராஜ்.
“நாங்களே நேரடியாக அறுவடை செய்து பாகு காய்ச்சி நாட்டுச்சக்கரை தயாரிக்க ஆரம்பிச்சுட்டோம். இதுவரைக்கும் 1500 கிலோ வரை ரெடி பண்ணியிருக்கோம். இன்னும் ரெண்டு மூனு நாள்ல எல்லாத்தையும் முடிச்சிட்டு சக்கரையை இடைத்தரகர் தொல்லையில்லாம மொத்த விலைக்கு நல்ல லாபத்தில் விக்க போறேன். எனக்கு கூலி ஆட்கள் மற்றும் லாரி வாடகை எல்லாம் மிச்சம் தான்” என்கிறார் இந்த 28 வயது இளைஞர்.
– லெட்சுமி பிரியா