புதுடெல்லி:

ந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய 5ஆம் கட்ட பொது முடக்கம் அமலில் உள்ளது. இருப்பினும் இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியல் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் வரும் ஜூன் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் மாநில மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூன் 16ஆம் தேதி அன்று பஞ்சாப், அசாம், கேரளா, உத்தரகாண்ட, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், திரிபுரா, ஹிமாச்சல பிரதேசம், சண்டிகர், கோவா, மணிப்பூர், நாகாலாந்து, லடாக், புதுச்சேரி, அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மிசோரம், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், தாதர் நாகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ, சிக்கிம் மற்றும் லட்சத்தீவுகளை சேர்ந்த முதலமைச்சர்களுடன் காணொலிக் காட்சி மூலம் உரையாடுகிறார்.

இதைத்தொடர்ந்து 17ஆம் தேதி மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா, பீகார், ஆந்திரப் பிரதேசம், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், தெலங்கானா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுடன் கலந்துரையாடுகிறார். இந்தக் காணொலிக் கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பொது முடக்கம் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.