மும்பை
மகாராஷ்டிர மாநில சமூக நல அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான தனஞ்சய் முண்டே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இங்கு சுமார் 98000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட 3600 பேர் மரணம் அடைந்துள்ளனர். மொத்தம் இந்தியாவில் உள்ள கொரோனா நோயாளிகளில் 3 இல் 1 பங்கு நோயாளிகள் இங்கு உள்ளனர்.
இன்று மகாராஷ்டிர மாநில சமூக நலத்துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான தனஞ்சய் முண்டே கோரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டது. அத்துடன் அவரது தனி செயலாளர், ஊடக ஆலோசகர் மற்றும் மூன்று அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இவர் இந்த வைரசால் தாக்கப்பட்ட மூன்றாம் அமைச்சர் ஆவார். ஏற்கனவே மகாராஷ்டிர மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் அஷோக் சவான் மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சர் ஜிதேந்திர அவகாத் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முண்டேவுக்கு தொண்டை வலி இருந்துள்ளது அதையொட்டி அவர் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்குத் தொற்று இருந்தது அங்குக் கண்டறியப்பட்டது. அவரது அலுவலக ஊழியர் மூவருக்கும் எவ்வித அறிகுறிகளும் இல்லாமலே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.