அமராவதி:
கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை தொலைத்துளைள துணி துவைத்தல் பணி செய்யும் சலவைத் தொழிலாளர்கள், முடிவெட்டும் சலூன் தொழிலாளர்கள், துணி தைக்கும் தையல் தொழிலாளர்களுக்கு தலா ரூ.10ஆயிரம் நிதி உதவி வழங்க என ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டு உள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக கூலித்தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர் கள், புலம்பெயர் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் மட்டுமின்றி நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஆந்திர மாநிலத்திலும் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு மாநில அரசு பல்வேறு நிதியுதவி மற்றும் திட்டங்களை அறிவித்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது சலவைத் தொழிலாளிகள், சலூன் கடைக்காரர்கள், தையல்காரர்கள் என மொத்தம் 2.47 லட்சம் பேருக்கு தலா 10000 ரூபாய் வழங்க ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதற்காக 247 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.
இதன்மூலம் 82,347 சலவை தொழிலாளர்கள், 38,767 சலூன் கடைக்காரர்கள், 1,25,926 தையல் காரர்கள் பயனடைவார்கள் என மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த புதிய திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, கடந்த ஒரு வருடத்தில் 3.58 கோடி மக்களுக்கு ரூ.42,465 கோடி நிதி உதவி வழங்கியிருப்பதாக தெரிவித்தார்.