சென்னை:
குடும்ப அட்டைதாரருக்கு விலையில்லா முகக்கவசம் வழங்கப்பட உள்ளதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ரேஷன்கடைகளில் இலவசமாக முகக்கவசம் வழங்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
சென்னையில் கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கடந்த 2-ஆம் தேதி சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள அம்மா அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழகம் முழுவதும், அனைத்து பொது விநியோகக் கடைகளிலும், குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாத முகக்கவசங்கள் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்பதால், தமிழக அரசே விலையில்லா முகக்கவசங்களை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படுவதாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில், குடும்ப அட்டைதாரருக்கு விலையில்லா முகக்கவசம் வழங்கப்பட உள்ளதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டது. இதன் மூலம் 6.74 கோடி பேருக்கு ரூ.13.48 கோடியில் முகக் கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.