கொரோனா தொற்று பரவலில் தீவிரமாகி ஏராளமானோரை பலி வாங்கிய இத்தாலிக்கு சிகிச்சை அளிக்க சென்ற கியூபா மருத்துவர்கள், மற்றும் செவிலியர்கள் அங்கு கொரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி சாதனை படைத்த நிலையில், தற்போது சொந்த நாடு திரும்பி உள்ளனர். அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்று உலகின் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களை பீதிக்குள்ளாகி வருகிறது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை வெற்றிகரமாக தடுத்துள்ள நாடுகளில் கியூபாவும் ஒன்று.
தொற்று நோயை எதிர்த்து போராடுவதற்கும், சுகாதார பாதுகாப்புக்கும், சமூகம் சார்ந்த சுகாதார பராமரிப்புக்கும் கியூபா புகழ்பெற்றது.
உலக நாடுகளை மிரட்டி வரும் அமெரிக்கா உள்பட வளர்ந்த நாடுகளே கொரோனாவின் பிடியில் சிக்கித் திணறி வரும் நிலையில், சாதாரண நாடான கியூபா அங்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்தி சாதனை படைத்துள்ளது.
இதன் காரணமாக, இத்தாலியில் கொரோனா தொற்று பரவலைகட்டுப்படுத்த முடியாமல் அந்த நாடு திணறி வந்த நிலையில், கியூபா நாட்டின் உதவியை கோரியது. அதைத்தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் 36 மருத்துவர்களையும், 15 செவிலியர்களையும் கியூபா, இத்தாலிக்கு அனுப்பி வைத்தது.
இத்தாலியில் கொரோனா தடுப்பு பணியில் கியூபா மருத்துவர்களும், செவிலியர்களும் தீவிரமாக பணியாற்றி வந்தனர். இதன் காரணமாக இத்தாலியில் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு படிப்படியாக குறையத்தொடங்கியது.
இத்தாலியில் இதுவரை 2லட்சத்து 35ஆயிரத்து 561 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 34ஆயிரத்து 43 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில், வெற்றிகரமாக பணியை முடித்த கியூபா மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவரும் விமானம் மூலம் ஹவானா திரும்பினர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கியூபா நாட்டைச் சேர்ந்த 12 மருத்துவக் குழுக்கள் உலகின் பல நாடுகளுக்கு அனுப்ப வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.